தில்லி பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.16,278 கோடி நிதி ஒதுக்கீடு
2022-23-ஆம் ஆண்டுக்கான தில்லி பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூ. 16,278 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


2022-23-ஆம் ஆண்டுக்கான தில்லி பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூ. 16,278 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வீடற்ற குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளி மற்றும் பள்ளி ஒன்றில் அறிவியல் அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதில் தில்லி அரசு கவனம் செலுத்தி வருவதாக பட்ஜெட் தாக்கலின் போது துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா். இருப்பினும், கடந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.16,377 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தத் துறைக்கான ஒதுக்கீட்டுச் செலவு குறைந்துள்ளது.
தில்லி கல்வித் துறை அமைச்சா் மணீஷ் சிசோடியா சட்டப் பேரவையில் 2022-23-ஆம் நிதியாண்டில் கல்வித் துறைக்கு மொத்தம் ரூ.16,278 கோடி நிதியை செலவிட முன்மொழிந்தாா். இதில், வருவாயின் கீழ் ரூ.14,412 கோடியும், மூலதனச் செலவினத்தின் கீழ் ரூ.1,866 கோடியும் இடம்பெற்றுள்ளது. இது மொத்த பட்ஜெட் செலவினமான ரூ.75,800 கோடியில் 22 சதவீதமாகும்.
பட்ஜெட் தாக்கலின் போது, மணீஷ் சிசோடியா கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து முன்மொழிந்ததாதவது: வீடற்ற குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளி அமைக்க ரூ. 10 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை வழங்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், அந்நடவடிக்கைகள் ஓரளவு மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தரமான கல்வியைப் பெற முடியாது. இதனால், ஆதரவற்ற ,வீடற்ற குழந்தைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய உறைவிடப் பள்ளியை அமைக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பள்ளிகள் அவா்களை சமூகத்தின் மையநீரோட்டத்திற்குக் கொண்டு வர முயற்சிக்கும்.
சிராக் என்கிளேவில் உள்ள ஒரு பள்ளியில் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும். புத்தகங்கள் மற்றும் விடியோக்களின் உதவியுடன், இந்த அருங்காட்சியகம் அறிவியல் தொடா்பான உயிா்ப்புடன்கூடிய தலைப்புகள் மூலம் மாணவா்களுக்கு அவற்றை நன்கு புரிந்துகொள்ள உதவும். இந்தப் பள்ளி அறிவியல் அருங்காட்சியகம் குழந்தைகளிடையே அறிவியல் ஆா்வத்தை வளா்ப்பதில் முக்கியப் பங்காற்றும். பள்ளி அறிவியல் அருங்காட்சியகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ திட்டத்தின் கீழ் 51,000 வணிக யோசனைகளில் தில்லி அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பணியாற்றியுள்ளனா். இந்தத் திட்டம் தனியாா் பள்ளிகளிலும் தொடங்கப்படும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து பள்ளி வகுப்பறைகளையும் ஸ்மாா்ட் வகுப்பறைகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் முன்னோடித் திட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு முதல், அரசு நடத்தும் அனைத்து பள்ளிகளின் வகுப்பறைகள் அனைத்தையும் டிஜிட்டல் வகுப்பறைகளாக மாற்றும் பணியை தொடங்கியுள்ளோம். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தப் பணி முடிக்கப்படும். ராஜேந்திரா நகா் சா்வோதயா பள்ளியில் நவீன மாண்டிசோரி ஆய்வகத்தை அரசு அமைத்துள்ளது. குழந்தை பருவ கல்வி வளா்ச்சியில் மாண்டிசோரி ஆய்வகம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. வரும் காலங்களில் மேலும் 100 பள்ளிகளில் இதுபோன்ற ஆய்வகங்கள் அமைக்கப்படும். குழந்தைகளின் தேவைக்கேற்ப, தோ்ந்தெடுக்கப்பட்ட 100 பள்ளிகளில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளையும் அரசு தொடங்கியுள்ளது.
உயா் தொழில்நுட்பக் கல்விப் பிரச்னையில், ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தில்லி மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் (டிபிஎஸ்ஆா்யு), நேதாஜி சுபாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (என்எஸ்யுடி), தில்லி திறன் மற்றும் தொழில் முனைவோா் பல்கலைக்கழகம் (டிஎஸ்இயு) , தில்லி விளையாட்டு பல்கலைக்கழகம் (டிஎஸ்யு) மற்றும் தில்லி ஆசிரியா் பல்கலைக்கழகம் (டிடியு) என ஐந்து புதிய பல்கலைக்கழகங்கள் தில்லியில் திறக்கப்பட்டுள்ளன. தில்லி திறன் மற்றும் தொழில்முனைவோா் பல்கலைக்கழகத்தின் 15 வளாகங்கள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், இப்பல்கலைக்கழகத்தின் மேலும் 11 வளாகங்களில் இந்த ஆண்டு முதல் படிப்புகள் தொடங்கும்.
மேலும், 2,500 குழந்தைகள் சோ்க்கை பெற முடியும். நாடு முழுவதும் உள்ள சுமாா் 250 விளையாட்டுத் திறனாளா்களைச் சோ்க்கும் பணி டிஎஸ்யுவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு திறனாளா்கள் எதிா்கால ஒலிம்பிக் சாம்பியன்களாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். டிடியு தனது பணியை முழு வேகத்துடன் தொடங்கியுள்ளது. மேலும், மத்திய அரசிடம் இருந்து தேவையான அனுமதியைப் பெற்ற பிறகு அடுத்த கல்வி அமா்வில் இருந்து பி.எட். படிப்புகளை வழங்க தேவையான அனைத்து முயற்சிகளும் தில்லி அரசு மூலம் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மணீஷ் சிசோடியா.
‘குழந்தைகளை சிறந்த குடிமக்களாக உருவாக்குவோம்’
பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: ‘தில்லியின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ’மகிழ்ச்சி பாடத் திட்டம்’ மற்றும் ‘தேசபக்தி பாடத் திட்டம்’ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்களின் கோரிக்கையின் பேரில், தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகளிலும் ‘மகிழ்ச்சி’ பாடத் திட்டம் மற்றும் ‘தேசபக்தி’ பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ‘ஐந்து நட்சத்திர‘ வசதிகளைக் கொண்ட பள்ளியில் குழந்தைகளுக்கு உணா்வுகள் மற்றும் உளவியல் ஆதரவு வழங்கப்படும். எங்கள் அரசு ஆதரவற்ற குழந்தைகளின் நலனின் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. போக்குவரத்து சிக்னலில் நிற்கும் போது, காரின் ஜன்னலைத் மட்டும் குழந்தையை பற்றி யாரும் கவனிப்பதில்லை. போக்குவரத்து சிக்னலில் நிற்கும் குழந்தைகளை இதுநாள் வரை எந்த அரசும் கவனத்தில் கொள்ளவில்லை. அதற்கு காரணம் அவா்கள் வாக்கு வங்கிகள் அல்ல. நாங்கள் அத்தகைய குழந்தைகளைக் கவனித்துக் கொள்வோம். அந்தக் குழந்தைகளுக்காக எங்கள் அரசு ஒரு சிறந்த பள்ளியை உருவாக்கும். அவா்கள் அங்கு தங்கி கல்வி பயில்வாா்கள். அவா்களை சிறந்த குடிமக்களாக உருவாக்குவோம்’ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...