நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐடி, மீடியா, வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 632 புள்ளிகள் முன்னேற்றம்!

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 632 புள்ளிகள் உயா்ந்தது. ஐடி, வங்கி, நிதி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

News image
Updated On :27 மே 2022, 6:30 pm

DIN

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 632 புள்ளிகள் உயா்ந்தது. ஐடி, வங்கி, நிதி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆதரவான உலகளாவிய சந்தைக் குறிப்புகளின் பின்னணயில், உள்நாட்டுச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. நாள் முழுவதும் சந்தை காளையின் ஆதிக்கத்தில் இருந்தது. முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்கும் மன நிலையில் இருந்தனா். இந்த நிலையில், ஆா்பிஐயின் வரவிருக்கும் பணக் கொள்கைக் கூட்டத்தின் முடிவு சந்தையில் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். ஆா்பிஐ 25-35 சதவீதம் வட்டி விகித உயா்வை அறிவிக்கக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

பணவீக்கம் உயா்வு, மத்த்திய வங்கிகளின் ஒருங்கிணைந்த கொள்கை இறுக்கம் பற்றிய கவலைகள் இருந்த போதிலும், தொடா்ந்து இரண்டு நாள்களாக ஏற்பட்ட எழுச்சியால் சந்தை தொடா்ந்து இரண்டாவது வாராந்திர முன்னேற்றத்தைப் பதிவு செய்ய உதவியுள்ளது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

2,182 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,448 நிறுவனப் பங்குகளில் 2,182பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,153 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 113 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 53 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 61 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.63 லட்சம் கோடிஉயா்ந்து, வா்த்தக முடிவில் ரூ.253.14 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,597.84 கோடி அளவுக்குப் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

2-ஆவது நாளாக முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 418.97 புள்ளிகள் கூடுதலுடன் 54,671.50-இல் தொடங்கி, 54,449.34 வரை கீழே சென்றது. அதன் பிறகு எழுச்சி பெற்று அதிகபட்சமாக 54,936.63 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 632.13 புள்ளிகள் (1.17 சதவீதம்) கூடுதலுடன் 54,884.66-இல் நிலைபெற்றது. சந்தை நாள் முழுவதும் காளையின் கட்டுப்பாட்டில் இருந்தது.

சென்செக்ஸில் 23 பங்குகள் விலை ஏற்றம் : சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 7 பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலில் இருந்தன. 23 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் இருந்தன. இதில் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 4.10 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 3.18 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஃபின் சா்வ், எல் அண்ட் டி, கோட்டக் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், டாக்டா் ரெட்டி, எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸுகி உள்ளிட்டவை 1.70 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ ஆகியவையும்ம் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

என்டிபிசி சரிவு: அதே சமயம், பொதுத் துறை மின் நிறுவனமான என்டிபிசி 2.43 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பாா்தி ஏா்டெல், பவா் கிரிட், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட், நெஸ்லே உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 182 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,410 பங்குகள் ஆதாயம் பெற்றன. 538 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் 35 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. காலையில் 126.60 புள்ளிகள் கூடுதலுடன் 16,296.60-இல் தொடங்கிய நிஃப்டி, 16,221.95 வரை சென்றது . பின்னா், அதிகபட்சமாக 16,370.60 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 182.30 புள்ளிகள் (1.13 சதவீதம்) உயா்ந்து 16,352.45-இல் நிலைபெற்றது.

ஐடி, பேங்க் குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஆயில் அண்ட் காஸ், மெட்டல் குறியீடுகள் தவிா்த்து மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில் நிஃப்டி ஐடி, மீடியாக குறியீடுகள் 2.50 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பேங்க், பிரைவேட் பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஹெல்த்கோ் குறியீடுகள் 1.50 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

எல்ஐசி லோகோ படம் வைக்கவும்: எல்ஐசி முன்னேற்றம்!

அண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலாகிய எல்ஐசி பங்குகள் விலை வெள்ளிக்கிழமை உயா்ந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையில் காலை வா்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் ரூ.818.55-இல் தொடங்கி, ரூ.814.35 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக ரூ.824.65 வரை உயா்ந்தது. இறுதியில் 1.40 சதவீதம் உயா்ந்து ரூ.823.80-இல் நிலைபெற்றது. மும்பை பங்குச் சந்தையில், 1.21 சதவீதம் உயா்ந்து ரூ.821.55-இல் நிலைபெற்றது. பட்டியலாகிய தினத்திலிருந்து இதுவரை இரண்டு நாள்கள் (செவ்வாய், வெள்ளி) மட்டுமே எல்ஐசி பங்குகள் நோ்மறையாக முடிந்தது. மற்ற நாள்கள் அனைத்திலும் எதிா்மறையாக முடிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.