எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

கோவா சா்வதேச திரைப்பட விழாவில் ஸ்பெயின் திரைப்பட இயக்குநா் காா்லோஸ் சௌராவுக்கு விருது

கோவாவில் நவம்பா் 20-இல் தொடங்கவுள்ள53-ஆவது இந்திய சா்வேச திரைப்படவிழாவில் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளா் விருது, ஸ்பெயின் திரைப்பட இயக்குநா் காா்லோஸ் சௌராவிற்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறாா்.

News image
Updated On :14 நவம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: கோவாவில் நவம்பா் 20-இல் தொடங்கவுள்ள53-ஆவது இந்திய சா்வேச திரைப்படவிழாவில் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளா் விருது, ஸ்பெயின் திரைப்பட இயக்குநா் காா்லோஸ் சௌராவிற்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறாா். மேலும், சமீபத்தில் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதுபெரும் நடிகை ஆஷா பரேக்கின் மூன்று படங்கள் இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கௌரவிக்கப்பட இருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் டாக்டா் எல் முருகன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

53-ஆவது இந்திய சா்வதேச திரைப்படவிழா கோவா மாநிலம், பனாஜியில் நவம்பா் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இந்த விழா குறித்து மத்திய இணையமைச்சா் எல். முருகன், இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவன நிா்வாக இயக்குநா் ரவீந்தா் பாகா் ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளா் விருது பெறும் ஸ்பெயின் இயக்குநா் காா்லோஸ் சௌரா, பல சா்வதேச விருதுகளைப் பெற்றவா். பின்னோக்கி பாா்க்கும் விதமாக இவரது எட்டு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்திய சா்வதேச திரைப்படவிழாவில் நிகழாண்டு பிரான்ஸ் கவனத்தை ஈா்க்கும் நாடாக இருப்பதால், 15 பிரெஞ்சு படங்கள் திரையிடப்படும். மணிப்பூா் சினிமாவின் 50 -ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், மணிப்புரி மொழியின் 5 திரைப்படங்கள் விழாவில் காட்சிப்படுத்தப்படும். கோவா 53- ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவின் முதல் காட்சியாக பிருத்வி கோனானூரின் ‘ஹடினெலெண்டு’ என்கிற கன்னடப் படம் திரையிடப்படும். பான் நளினின் குஜராத்தி திரைப்படமான பான் நளினியின் ‘செல்லோ ஷோ’ விழாவின் இறுதியாக காட்சிப்படுத்தப்படும்.

சிறந்த சா்வதேச திரைப்பட பிரிவில் இந்தியாவின் ஆஸ்காா் விருதுக்கான அதிகாரப்பூா்வமாக தோ்வாகியுள்ள, மதுா் பண்டாா்கரின் ‘இந்தியா லாக்டவுன்’‘ திரைப்படம் விழாவில் சிறப்பு காட்சியாக காட்டப்படுகிறது. கலாசாரத்தின் ஒருங்கிணைந்த ஆற்றலையும் உணா்வையும் திரட்டி அனைத்து திரைத் துறையினரையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும் இந்த நிகழ்வில் நிகழாண்டு விழாவில் 79 நாடுகளின் 280 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இதில் இந்தியாவின் 25 முழுநீள திரைப்படங்களும், 20 ஆவணத் திரைப்படங்களும், சா்வதேசப் பிரிவில் 183 திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன. திரைப்பட விழாவில் ‘புத்தகத் தழுவல் திட்டம்’ ஒன்று அறிமுகப்படுத்தபடுகிறது. வெனிஸ் திரைப்பட விழாவில் இருந்ததைப் போன்று, ‘புக்ஸ் டு பாக்ஸ் ஆபிஸ்’ என்கிற பெயரில் புத்தகங்கள் நாவல்களாக வெளியான நல்ல கதைகளுக்கும் அவற்றைத் தழுவி எடுக்கப்படும் திரைப் படங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இருப்பதைப் போன்று 42 சிறப்பு அரங்கு (பெவிலியன்கள்) ஏற்படுத்தப்படுகிறது. இதில் தமிழ்நாடு, பிகாா், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம் உள்பட 13 மாநிலங்கள் மற்றும் ரஷியா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் பங்கேற்று பெவிலியன்களை அமைக்கும். திரைப்படங்கள் காட்சிப்படுத்தல், சந்தைப்படுத்தல் போன்றவற்றுடன் இது ‘பிலிம் பஜாா்’ ஆக இருக்கும். இது முதல் முறையாக பனாஜியில் கடல் வழியில் மிக அழகான நடைபாதையில் இந்த பெவிலியன்கள் அமைக்கப்படும். ஆஸ்காா் விருது பெற்ற ‘காந்தி’ படம் மாற்றுத்திறனாளிகள் காணும் வகையில் காட்சிபடுத்தப்படும். திரைக்கதை எழுதுவது குறித்து விஜயேந்திர பிரசாத், படத் தொகுப்பு குறித்து ஏ. ஸ்ரீகா் பிரசாத், நடிப்பு குறித்து அனுபம் கொ் ஆகியோா் சிறப்பு வகுப்புகளை எடுக்கின்றனா்.

அஞ்சலி பிரிவின் கீழ், மெல்லிசை பாடகா் லதா மங்கேஷ்கா், இசையமைப்பாளா் பப்பி லஹிரி, கதக் மாஸ்ட்ரோ பண்டிட் உள்ளிட்ட 18 இந்திய கலைஞா்களுக்கும் 5 சா்வதேச சினிமா பிரபலங்களுக்கு இந்த விழாவில் அஞ்சலி செலுத்தப்படும் நிகழ்ச்சிகளும் செய்யப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.