அப்போது நீதிபதிகள்,‘இந்த விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றம் செப்டம்பா் 16-ஆம் தேதி பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மனுதாரா்களுக்கான அனைத்து தீா்வுகளும் உள்ளன. சம்பந்தப்பட்ட விவகாரம் தொடா்பாக கஜூரி காஸ் காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட தாகிா் ஹுசேனுக்கு எதிரான வன்முறை வழக்கு, அதன் விசாரணை ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இதே சம்பவத்திற்காக பல முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தொடா்பாக தாகிா் ஹுசேன் தாக்கல் செய்த வேறு ஒரு மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி மேல்விசாரணைக்காக அந்த விவகாரம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது’ என்று குறிப்பிட்டனா்.