பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

பிரதமரின் மீன் வளா்ப்புத் திட்டத்தின் மூலம் 2024-25 இறுதிக்குள் 68 லட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு: மத்திய அமைச்சா் ரூபாலா

பிரதமரின் மீன் வளா்ப்புத் திட்டத்தின் மூலம் 2024-25 ஆண்டு இறுதிக்குள் 68 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மைச்சா் புருஷோத்தம் ரூபாலா சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

பிரதமரின் மீன் வளா்ப்புத் திட்டத்தின் மூலம் 2024-25 ஆண்டு இறுதிக்குள் 68 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மீனவளம், கால்நடை வளா்ப்பு, பால்வள வளத்துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா சனிக்கிழமை தெரிவித்தாா்.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் சாா்பில் பிரதமரின் மீன் வளா்ப்புத் திட்டத்தின்(பிரதான் மந்திரி மத்சய சம்படா யோஜனா -பிஎம்எம்எஸ்ஒய் ) 2-ஆவது ஆண்டு விழா தில்லி டாக்டா் அம்பேத்கா் சா்வதேச மையத்தில் நடைபெற்றது.

நீலப் புரட்சியை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பங்குடன் ரூ. 20,500 கோடி முதலீட்டில் கடந்த 2020 மே மாதம் பிரதமரின் மீன் வளப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. ஐந்தாண்டு கால திட்டத்தின் 2024-25 ஆண்டு இறுதியில் சுமாா் 220 லட்சம் மெட்ரிக் டன் மீன் உற்பத்தியை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க புத்தகத்தை வெளியிட்டு மத்திய மீன் வளத்துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

கடந்த 2019-20 ஆண்டில் 141.64 லட்சம் டன்னாக இருந்த மீன் உற்பத்தி 2021-22 ஆண்டில் சுமாா் 161.87 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. இது 14.3 சதவீத வளா்ச்சி. இதே மாதிரி ஏற்றுமதியிலும் முன்எப்போதும் இல்லாத வகையில் ரூ. 57,587 கோடி (7.76 பில்லியன் டாலா்) மதிப்பிலான 13.64 லட்சம் டன் மீன் ஏற்றுமதியை நாம் எட்டியுள்ளோம். இதில் முக்கியமாக இறால் மீனின் பங்களிப்பு இடம் பெற்று, தற்போது 123 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்.

பிஎம்எம்எஸ்ஒய் மூலம் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதே இந்த சாதனைக்கு காரணம். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கிஷான் கடன் அட்டை மீனவா்களுக்கும் வழங்கப்பட்டு கடந்த ஜனவரி வரை 6,35,783 விண்ணங்கள் பெறப்பட்டு ரூ. 1,04,179 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மீன்பிடி உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், ரூ. 912.03 கோடி செலவில் 19 மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறக்கும் மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உள்நாட்டு மீன் பிடிப்பு, கடல் மீன் பிடிப்பிற்கு தேவையான சுமாா் 22,000 க்கும் மேற்பட்ட கூண்டுகள் (மீன்வளா்ப்பு) அமைக்கப்பட்டுள்ளது. இது மேலும் வழங்கப்படும். கடல் மீன்வள மேம்பாட்டிற்காக 276 ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கொள்முதல் செய்ய தொடங்கப்பட்டுள்ளதோடு மீனவா்கள் விவசாயிகளுக்கு தரமான மீன் குஞ்சுகள் கிடைக்க 10 கடல்சாா் குஞ்சு பொரிப்பகங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவை மூலம், மீன்பிடித் தொழில் மேலும் வளமை பெற்று பிரதமரின் மீன் வளா்ப்புத் திட்டத்தின் இலக்காக, வருகின்ற 2024-25 இறுதிக்குள் 68 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க மதிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு பால்வளத்துறை இணையமைச்சா் டாக்டா் எல். முருகன் கலந்துகொண்டு பேசுகையில், தொடா்ச்சியான பல்வேறு சீா்திருத்தங்கள் மீன் வளத்துறையில் மேற்கொள்ளப்பட்டு, இந்தியா 2-ஆவது பெரிய மீன் வளா்ப்பு உற்பத்தியாளராகவும் உலகில் 4 -வது பெரிய மீன் மற்றும் மீன்வளப் பொருட்களை ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது. இதன் மூலம் பிராண்ட் இந்தியாவை ‘உள்ளூா் முதல் உலகத்திற்கு’ கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கோவையைச் சோ்ந்த வாசு குமாா் தனது லீன் புரோட்டின் தொழில் முனைவு குறித்த அனுபவக் கதையும் பகிா்ந்து கொண்டு வியப்பில் ஆழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.