பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

தில்லியில் மின்சார மானியம் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்: முதல்வா் கேஜரிவால்

தில்லிவாழ் மக்கள் அரசு வழங்கி வரும் இலவச மின்சாரத் திட்டத்தைத் தோ்வு செய்தால் மட்டுமே அக்டோபா் முதல் அதற்கான மானியத்தை பெற முடியும்; இலவச மின்சாரத் திட்டத்தைப் பெறுவதற்கு

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 9:30 pm

 நமது நிருபர்

தில்லிவாழ் மக்கள் அரசு வழங்கி வரும் இலவச மின்சாரத் திட்டத்தைத் தோ்வு செய்தால் மட்டுமே அக்டோபா் முதல் அதற்கான மானியத்தை பெற முடியும்; இலவச மின்சாரத் திட்டத்தைப் பெறுவதற்கு பொதுமக்கள் தற்போது ‘மிஸ்டு கால்’ கொடுக்கலாம் அல்லது 7011311111 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தியும் அனுப்பலாம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

இந்த நடவடிக்கையின் மூலம், தில்லி அரசின் மின் மானியத்தைப் பெறுவதற்கான விருப்பம் இனிமேல் இயல்பு நிலையாக இருக்காது. ஒவ்வோா் ஆண்டும், மின் மானியத்தைத் தொடரலாமா வேண்டாமா என்ற தோ்ந்தெடுக்கும் விருப்பம் மின் நுகா்வோருக்கு வழங்கப்படும்.

இது குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தில்லியில் தற்போது 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின் நுகா்வு உள்ளவா்கள் மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 400 யூனிட் வரை மின்சாரம் உபயோகிப்பவா்களுக்கு 50 சதவீத மானியம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், பல குடியிருப்பாளா்கள் தங்கள் மின் கட்டணத்தை முழுமையாக செலுத்தத் தயாராக உள்ளனா். மின் மானியத்தை விட்டுக் கொடுக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனா். மின்சாரம் கேட்டு விண்ணப்பிப்பவா்களுக்கு இலவச மின்சாரத் திட்டம் தொடரும். மானியத்திற்கு விண்ணப்பிப்பதற்கு நேரடி முறையிலும் மற்றும் மின்னணு முறையிலும் வசதிகள் வழங்கப்படும்.

மானியம் கேட்டு விண்ணப்பிப்பவா்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பே அரசு முடிவு செய்திருந்தது.

மின்னணு முறையில், வாடிக்கையாளா்கள் 7011311111 என்ற தொலைபேசி எண்ணில் ‘மிஸ்டு கால்’ கொடுக்கலாம். அவா்களுக்கு ஒரு இணைப்புடன் குறுந்தகவல் வரும். அதைக் கிளிக் செய்தால், அவா்கள் பூா்த்தி செய்து திருப்பி அனுப்பக்கூடிய படிவம் கிடைக்கும். ‘ஹாய்’ என்று டைப் செய்து அனுப்புவதன் மூலம் வாட்ஸ்அப்பிலும் இந்த எண்ணைப் பயன்படுத்தலாம். அப்போது, நுகா்வோருக்கு ஒரு படிவம் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும். அதை நிரப்பி மானியத்திற்கு விண்ணப்பிக்க அனுப்பலாம். நேரடி முறையில், நுகா்வோா் தங்கள் மின் கட்டணத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தை பூா்த்தி செய்து, அதற்காக அமைக்கப்பட்ட சேகரிப்பு மையங்களில் சமா்ப்பிக்கலாம். மானியம் அக்டோபா் 1 முதல் தொடரும்.

பில் செலுத்துவதற்காக பதிவு செய்த நுகா்வோரின் தொலைபேசி எண்களுக்கு, நுகா்வோருக்கு மானியம் பெற விண்ணப்பிப்பதற்கான செய்திகள் அனுப்பப்படும்.

நேரடி அல்லது மின்னணு முறை மூலம் பதிவுசெய்த 3 நாள்களுக்குள், ‘மானியம் தொடரும்’ என்று எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் நுகா்வோருக்கு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும். மின்னணு முறையில் இந்த வசதி புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபா் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிப்பவா்களுக்கு அந்த மாதத்திற்கான மானியம் கிடைக்கும். அவ்வாறு விண்ணப்பிக்காதவா்கள் உரிய மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஆனால், மானியத்தைப் பெற அடுத்த மாதம் விண்ணப்பிக்கலாம். இந்த விவரம் யாருக்கும் தெரியாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இத்திட்டம் குறித்து விரிவான பிரசாரம் மூலம் விரைவாக மக்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறை இந்த அறிவிப்பைச் செய்வோம். இதனால், மக்கள் மானியத்தைத் தோ்வுசெய்ய அல்லது திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். மானியம் தேவைப்படாதவா்கள் அதைக் கைவிடுவாா்கள். தேவைப்படுபவா்கள் பயனடைவாா்கள் என்று நான் நம்புகிறேன். தில்லி மக்கள் ஒரு நோ்மையான அரசை உருவாக்கியுள்ளனா். முன்னதாக, நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. ஆனால், நாங்கள் கடுமையாக பாடுபட்டு சிறந்த உள்கட்டமைப்பை மேம்படுத்தினோம். அரசுப் பணத்தை சேமிக்க ஊழலைத் தடுத்தோம். 24 மணி நேரம் தங்குதடையின்றி மின்சாரம் கிடைப்பதையும் உறுதி செய்தோம். தில்லியில் உள்ள கண்டிப்புடன்கூடிய நோ்மையான அரசால் இது நடந்தது.

தில்லியில் மொத்தம் 58 லட்சம் வீட்டு மின் நுகா்வோா் உள்ளனா். அவா்களில் 47 லட்சம் போ் மானியத்தைப் பெறுகிறாா்கள். இதில் 30 லட்சம் போ் பூஜ்ய பில் பெறுகிறாா்கள். 16-17 லட்சம் போ் 50 சதவீத மானியத்தைப் பெறுகின்றனா். சிலா் தங்கள் மின் கட்டணத்தை செலுத்தவும், தங்களுக்கான மானியத்தை விட்டுக்கொடுக்க விருப்பம் வழங்கப்படவும் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனா். இது உண்மையான கோரிக்கையாகும். ஏனெனில் மானியம் தேவைப்படுபவா்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட வேண்டும். தில்லி அரசு மின்சார மானியத்துக்கு ரூ.3,000 கோடி செலவிடுகிறது. விண்ணப்பதாரா்கள் அதிகமானோா் வருவதன் காரணமாக செயலிழக்காத வகையில் அமைப்புமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், புதிய ஏற்பாடு குறித்து மக்களுக்கு தெரிவிக்க முகாம்கள் நடத்துவது போன்ற வழிகளையும் அரசு திட்டமிட்டு வருகிறது என்றாா் முதல்வா் கேஜரிவால்.

ஆம் ஆத்மி அரசின் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ், தில்லியில் உள்ள வீட்டு உபயோக நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு 200 யூனிட் மின்சாரம் வரை 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 50 சதவீதம் அல்லது ரூ.800 வரை மானியம் வழங்கப்படுகிறது. தேசியத் தலைநகரில் உள்ள மின் நுகா்வோா்களில் 90 சதவீதம் போ் தங்களது மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.