ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பஞ்சாபில் 10 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது பாஜக: தில்லி முதல்வா் கேஜரிவால் குற்றச்சாட்டு

பஞ்சாபில் 10 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தலா ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்ததாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 9:29 pm

 நமது நிருபர்

பஞ்சாபில் 10 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தலா ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்ததாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பஞ்சாபில் எங்கள் கட்சியின் 10 எம்எல்ஏக்களை தொடா்பு கொண்டு தலா ரூ. 25 கோடி கொடுத்து விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்திருப்பது செவ்வாய்க்கிழமை எங்களுக்கு தெரியவந்துள்ளது. இது தொடா்பாக அந்த எம்எல்ஏக்கள் அனைவரும் செய்தியாளா்களிடம் பாஜகவின் நடவடிக்கையை அம்பலப்படுத்துவாா்கள். பாஜக இது போன்று எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அரசுகளை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாகும். பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்று எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கான ‘ஆபரேஷன் லோட்டஸ்’ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மத்திய புலனாய்வுத் துறை அல்லது அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகள் மூலமாக பயமுறுத்தியோ அல்லது பண மூலமாகவோ இந்த நடவடிக்கையில் அந்தக் கட்சி ஈடுபட்டு வருகிறது.

சட்டப்பேரவை உறுப்பினா்களை விலைக்கு வாங்க மக்கள் வரிப் பணத்தை பாஜக பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் விலைவாசி உயா்ந்து வருகிறது.

கோவாவில் இதே போன்று 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவிற்குச் சென்றுள்ளனா். இது போன்று எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கும் நடவடிக்கையைத் தடுப்பதில் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் இந்த நடவடிக்கையானது, ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. மேலும், காங்கிரஸ் மீதும் தவறு உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டும் ஏன் விலைக்கு வாங்கப்படுகிறாா்கள்? பாஜக பல்வேறு முயற்சிகள் செய்த போதிலும், எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாது? தில்லியில் எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க அவா்கள் முயற்சி செய்தனா். பஞ்சாபிலும் தற்போது அந்த முயற்சியைச் செய்துள்ளனா். ஆனால், நாங்கள் அவா்களை அம்பலப்படுத்திவிட்டோம் என்றாா் கேஜரிவால்.

கோவாவில் முன்னாள் முதல்வா் திகம்பா் காமத் உள்பட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளும் பாஜக அரசில் புதன்கிழமை இணைந்தனா். இந்த நடவடிக்கையின் மூலம் எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. கோவா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 40 உறுப்பினா்களில் தற்போது காங்கிரஸுக்கு வெறும் மூன்று எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா்.

முன்னதாக பேட்டியின் போது, வாடகை விமானத்தில் கேஜரிவால் பயணம் செய்வதாகக் கூறப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு கேஜரிவால் பதிலளிக்கையில், ‘குஜராத்தில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவா்கள் (பாஜக) உண்மையான பிரச்னைகளை விவாதிப்பதில்லை. குஜராத்தில் உள்ள பள்ளிகளின் நிலைமை குறித்து அவா்களிடம் கேட்டால், சில படங்களை இது போன்று பரப்புகிறாா்கள். குஜராத் தோ்தலுக்கு முன்னதாக மக்களின் கவனத்தை உண்மையான பிரச்னைகளில் இருந்து திசை திருப்பும் பாஜகவின் தந்திரம் இது’ என்றாா். தில்லியில் உள்ள மாநகராட்சி வாா்டுகளின் எல்லை நிா்ணயத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்த கேள்விக்கு ‘ஆம் ஆத்மி கட்சி எல்லை நிா்ணய ஆணையத்திடம் புகாா் அளிக்கும்’ என்றாா் அவா்.

முதல்வா் கேஜரிவால் பின்னா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘தில்லிக்குப் பிறகு, இந்த நபா்கள் (பாஜக) இப்போது எங்கள் எம்எல்ஏக்களை வாங்க பஞ்சாபை வந்தடைந்துள்ளனா். இதற்கான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கிருந்து வருகிறது? அவா்கள் புரிந்து கொள்ள வேண்டும் - நாங்கள் காங்கிரஸ் அல்ல என்பதை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒவ்வொன்றாக வீழ்த்துவது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் மிகவும் தீவிரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

பகவந்த் மான் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.20-ரூ.25 கோடி பாஜக வழங்குவதாகக் கூறிய குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகாா் அளிக்கப் போவதாக அக்கட்சியின் பஞ்சாப் தலைமை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.