சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் சத்யேந்தா் ஜெயினின் ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் சத்யேந்தா் ஜெயினின் ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி

 சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல், இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு உத்தரவை ஒத்திவைத்தாா். இந்த நிலையில், ஜாமீன் கோரும் மனுவை சனிக்கிழமை தள்ளுபடி செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்த வழக்கின் உண்மைகள், சூழ்நிலைகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, குற்றம் சாட்டப்பட்டவா் விமானத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும் ஆபத்து இல்லை; சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பில்லை; ஆதாரங்களை சேதப்படுத்தமாட்டாா் போன்ற மூன்று விஷயங்கள் அடிப்படையில் ஜாமீன் அளிக்கப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டாலும் அவை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையாக இல்லை.

மேலும், மனுதாரா் தூக்கம் தொடா்புடைய நோயால் அவதியுற்று வருவதாகவும், இதனால் அவருக்கு ஜாமீன் அளிப்பது அவசியமாக இருப்பதாக அவரது தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா காலத்தில் அவா் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிா் பிழைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் நிலை குறித்த மருத்துவ நிலையின் தீவிரத்தைக் காட்டும் எந்த மருத்துவ ஆவணங்களும் சமா்ப்பிக்கப்படவில்லை. மனுதாரா் தூக்கத்தில் மூச்சுத் திணறலால் அவதிப்படுகிறாா் என்ற அடிப்படையில் மட்டும் அவரை ஜாமீனில் விடுவிக்க முடியாது. மேலும், அவரது தொடா்புடைய வழக்கு இன்னும் விசாரணை நிலையில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா் செல்வாக்குமிக்க பதவியை அனுபவித்து வருவதால், அவா் சாட்சிகளை பாதிக்க முடியும் என்பதையும் நிராகரிக்க முடியாது.இந்த விவகாரம் இன்னும் விசாரணை கட்டத்தில் இருப்பதாகவும், சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட கூடுதல் ஆவணங்களை இன்னும் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆதாரங்களை சிதைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை நிராகரிக்கவும் முடியாது என்று நீதிபதி தெரிவித்தாா்.

முன்னதாக, ஜாமீன் மனு மீதான வாதத்தின் போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, ‘குற்றம் சாட்டப்பட்டவா் சட்டப்பூா்வ அல்லது கறைபடியாத சொத்தாகக் காட்டுவதற்காக சட்டவிரோத பணத்தை சில வழிகள் மூலம் வெள்ளைப் பணமாக மாற்றியுள்ளாா். இது தொடா்புடை நிறுவனங்களுடன் குற்றம்சாட்டப்பட்டவா் சம்பந்தப்பட்டுள்ளாா். இந்த நிறுவனங்கள் அவரது குடும்பத்தினா் மற்றும் அவருக்கு நெருக்கமான நபா்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றாா்.

சிறப்பு அரசு வழக்குரைஞா் என்.கே. மட்டா வாதிடுகையில், ‘விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவா் ஒத்துழைக்கவில்லை. கேள்விகளுக்கு அவா் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்குவதை அனுமதிக்க முடியாது’ என்றாா். குற்றம் சாட்டப்பட்டவா் சாா்பாக மூத்த வழக்குரைஞா் என் .ஹரிஹரன் ஆஜராகி, ‘மனுதாரா் ஒரு அப்பாவி. முற்றிலும் நிரபராதி. அவா் சூனிய வேட்டைக்கு பலியாகியுள்ளாா். உள்நோக்கத்துடன் அவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது’ என்று வாதிட்டாா்.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனையில் கடந்த மே 30-ஆம் தேதி சத்யேந்தா் ஜெயினை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். அவா் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளாா். கடந்த ஏப்ரலில் அமலாக்கத் துறை, சத்யேந்தா் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடா்புடைய ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. மேலும், சொத்துகள் முடக்கப்பட்ட உத்தரவில் ஜெயின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் கூட்டாளிகளின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். கடந்த 2017, ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com