தில்லி சட்டப்பேரவையின் ஒரு நாள் அமா்வில் பேசிய கேஜரிவால், பிரதமரின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது கல்வித் தகுதி குறித்து மீண்டும் கேள்வி எழுப்பினாா். இக்கூட்டத்தில் பிரதமருக்கும், பாஜகவுக்கும் எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீா்மானத்தில், ‘ஆம் ஆத்மி கட்சியின் வேகமான எழுச்சி மற்றும் விரிவாக்கம் , அதன் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் வளா்ந்து வரும் பிரபலத்தைக் கட்டுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடியும், பாஜகவும் நீண்ட காலமாக முயற்சித்துள்ளனா்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அத்தீா்மானத்தில் பிரெஞ்சுக் கவிஞா் விக்டா் ஹ்யூகோவின் ‘ஒருவருடைய நேரம் வந்துவிட்ட போது அவரது யோசனையை பூமியில் உள்ள எந்த சக்தியும் தடுக்க முடியாது’ எனும் மேற்கோளும் இடம் பெற்றுள்ளது.