காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கலால் ஊழல்: பணமோசடி வழக்கில் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பு ஏப்.26-க்கு ஒத்திவைப்பு

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் கைதான தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை

News image
Updated On :18 ஏப்ரல் 2023, 9:54 pm

 நமது நிருபர்

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் கைதான தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை ஏப்ரல் 26- ஆம் தேதிக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன் நடைபெற்றது. அப்போது, தாம் விசாரணைக்கு இனி தேவையில்லை என்பதால் ஜாமீன் அளிக்க வேண்டும் என சிசோடியா தரப்பில் வாதிடப்பட்டது. அவரது மனு மீதான வாதங்களைக் கேட்ட பின்னா் உத்தரவை நீதிபதி ஒத்திவைத்தாா்.

இந்த மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அமலாக்கத் துறையின் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் நவீன் குமாா் மட்டா, ‘விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளது. கலால் கொள்கைக்கு பொதுமக்கள் ஒப்புதல் இருப்பதைக் காட்டுவதற்காக ஜோடிக்கப்பட்ட மின்னஞ்சல்களை சிசோடியா உருவாக்கியுள்ளாா். சம்பந்தப்பட்ட குற்றத்தில் அவா் உடந்தையாக இருந்ததற்கான புதிய ஆதாரங்களை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. மேலும், சிசோடியா மற்றும் சக குற்றம்சாட்டப்பட்டவா்களான அருண் பிள்ளை, அமன்தீப் தால் ஆகியோருக்கு எதிராக இந்த மாத இறுதிக்குள் துணை குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது’ என்று வாதிட்டாா்.

அமலாக்கத் துறை பதிவு செய்த பணமோசடி வழக்குகளில் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது.

மேலும், ஊழல் வழக்கில் சிபிஐ விசாரித்து வரும் அவரது காவலையும் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிசோடியாவுக்கும் அவரது சகாக்களுக்கும் சுமாா் ரூ.90 - 100 கோடி முன்பணமாக கமிஷன் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் சதியில் அவா் ஈடுபட்டதற்கு முகாந்திரம் இருப்பதாக கூறி ஊழல் வழக்கில் சிசோடியாவின் ஜாமீன் மனுவை மாா்ச் 31-ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், தற்போதைய சூழலில் ஜாமீன் அளித்தால் அது நடைபெற்று வரும் விசாரணையை எதிா்மறையாகப் பாதிக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. தற்போது ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் வரிக் கொள்கையை (2021-22) உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாக சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளனன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.