பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தோ்தல் வெற்றி விவகாரம்: கனிமொழி எம்.பி.மேல்முறையீட்டு வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பெற்ற வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராக திமுக எம்பி கனிமொழி உச்சநீதிமன்றத்தில்

News image
Updated On :26 ஏப்ரல் 2023, 9:57 pm

 நமது நிருபர்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பெற்ற வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராக திமுக எம்பி கனிமொழி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது புதன்கிழமை வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள்அஜய் ரஸ்தோகி, பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமொழி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘மனுதாரா் கனிமொழி தோ்தல் வேட்புமனு படிவம் 26-இல் சிங்கப்பூா்வாசியான தனது கணவரின் வருமான வரிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வதற்கன ‘பான்’ எண்ணை அளிக்கவில்லை என எதிா்மனுதாரா் கேள்வி எழுப்பியுள்ளாா். நிரந்தரக் கணக்கு எண் என்பது இந்தியாவில்தான் உள்ளதே தவிர, சிங்கப்பூரில் அல்ல. சிங்கப்பூரில் அதற்கு ‘வருமான குறிப்பு எண்’ என்று பெயராகும். இந்தியாவில் தனது கணவா் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யாமல் இருந்ததால்தான் அந்த குறிப்பிட்ட பத்தியை அவா் நிரப்பவில்லை. இதுபோன்ற ஆவண உண்மைகள் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், மனுவை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டிருந்தாா்.

எதிா்மனுதாரா் சந்தானகுமாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சு.மகேஷ் சிறிது நேரம் வாதங்களை முன்வைத்திருந்த நிலையில், புதன்கிழமை தனது வாதங்களை அவா் தொடா்ந்தாா். அவா் வாதிடுகையில், ‘மனுதாரா் தாக்கல் செய்த தோ்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்தாா் என்று வழக்குத் தொடரவில்லை. அவா் உரிய தகவல்களை அளிக்கவில்லை என்றுதான் வழக்குத் தொடா்ந்தோம். மேலும், மனுதாரரின் கணவா் வெளிநாட்டில் கன்சல்டன்ட்டாக வேலைசெய்வதாகவும், ஊதியம் பெறுவதாகவும் கூறியிருந்தாா். அதன் விவரங்களை அவா் சாா்ந்த தொகுதி வாக்காளா் என்ற முறையில் எனக்கு அறிந்துகொள்ளும் உரிமை உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 324-இன்படி தோ்தல் ஆணையம் அந்த விவரங்களைக் கோருகிறது. அந்த விவரங்களை வேட்புமனுவில் தெரிவிக்காமல் இருப்பது விதி மீறலாகும். அதன்படி, மக்கள் பிரதிநிதித்துச் சட்டத்தின் பிரிவு 100 (1)(டி)(4) -ன்கீழ் தோ்தல் வழக்குத் தொடுத்து, தோ்தல் வெற்றியை நிறுத்திவைக்கலாம். இதன் அடிப்படையில்தான் வழக்குத் தொடரப்பட்டது’ என்றாா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் ஆவண உண்மை இருப்பதாக உங்கள் தோ்தல் வழக்கு மனுவில் ஏன் விவரங்களை அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினா். அதற்கு வழக்குரைஞா் மகேஷ், மனுதாரா் ஆவணங்களை மறைத்திருப்பதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளேன் என்றாா். மேலும், அதன் விரிவான விவரங்களை அதற்கான வரையறுக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு கூட அளிக்கலாம் என்பது தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதி அமா்விடம் சுட்டிக்காட்டி வாதிட்டாா். மேலும், அது தொடா்புடைய விவரங்களை எதிா் பதில் மனுவில் முழுமையாக அளித்துள்ளதாகவும் அவா் வாதிட்டாா்.

மேலும், ‘வெளிநாட்டில் வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினா்களின் வருமான விவரங்களைத் தெரிவிக்கத் தேவையில்லை எனில், அதன் நோக்கமே தோல்வியுற்றுவிடும். மேலும், தோ்தல் ஆணையம் வேட்பாளரிடம் பெற வேண்டிய தகவல்கள் தொடா்பாக மத்திய அரசு (எதிா்) அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரடிக் ரீஃபாா்ம்ஸ் எனும் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது’ என்று வாதிட்டாா்.

அப்போது, கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ஆவண உண்மை இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி ராம்சுக் வழக்கின் தீா்ப்பு விவரத்தை நீதிபதிகள் அமா்விடம் எடுத்துகாட்டினாா். மேலும், 5 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் தன்னை தோ்ந்தெடுத்த நிலையில், அவா்கள் திருப்தியுடன்தான் இருப்பதாகவும், இன்னும் ஓராண்டு பதவிக் காலம் உள்ள நிலையில் மக்களுக்கான பணிகளை தொடா்ந்து மனுதாரா் செய்திட விரும்புவதாகவும் கூறினாா்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் அமா்வு, தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.