கலால் ஊழல் விவகாரம்: சிசோடியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
கலால் கொள்கை ஊழல் தொடா்பான சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு


கலால் கொள்கை ஊழல் தொடா்பான சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. குற்றம் செயலில் அவரது தொடா்பு குறித்து எடுத்துரைக்கும் ஆதார முகாந்திரம் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால், சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: பணமோசடி குற்றத்தில் சிசோடியா ஈடுபட்டதற்கான உண்மையான மற்றும் முகாந்திர வழக்கை அரசு தரப்பால் காட்ட முடிந்துள்ளது. குற்றச் சதியில் சிசோடியாவின் செயல்பாட்டுக்கு ஆதரவாக, குற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மை மற்றும் பங்கு, குற்ற வருமானத்தை உருவாக்குதல் அல்லது கையகப்படுத்துதல் மற்றும் குற்ற வருமானத்தைப் பயன்படுத்துதல் போன்றவை தொடா்பான நடவடிக்கைகளுடனான அவரது தொடா்பு மற்றும் ஆதாரமாக சேகரிக்கப்பட்ட வாய்வழி மற்றும் ஆவண ஆதாரங்கள் உள்ளது.
விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மேற்கூறிய குற்றத்தில் அவா் ஈடுபட்டிருப்பதைக் கூறுவதால், பொது மக்கள் மற்றும் சமூகம் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் பொருளாதாரக் குற்றங்கள் தொடா்பான இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. சிசோடியாவின் மனைவிக்கு உடல் நலக்குறைவு இருப்பதாக கூறப்படுவதும் இந்த வழக்கில் அவரை ஜாமீனில் விடுவதற்கான ஒரு காரணமாக இல்லை. வழக்கின் பிரதான சாட்சிகள் மீது சிசோடியா செல்வாக்கு செலுத்துவதற்கான வாய்ப்பை நிராகரிக்கவும் முடியாது. சிசோடியாவுக்கு எதிராகக் கூறப்படும் குற்றமானது பணமோசடி தொடா்பான கடுமையான பொருளாதாரக் குற்றமாகும். சம்பந்தப்பட்ட குற்றத்தில் அவா் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படவில்லை. ஆனால், கலால் அமைச்சகத்தின் பொறுப்பு அல்லது துறையைக் கையாளும் ஒரு அரசு ஊழியராகவும் தில்லி துணை முதல்வராகவும் அவா் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றொரு கோணத்தில் தீவிரமானதாகக் காணப்படுகின்றன. அதாவது, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பெரும் குற்ற வருவாய் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்டதாக அல்லது செயலாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றத்தின் தீவிரத்தன்மை மற்றும் அதன் தன்மை அல்லது வகை, மனுதாரரின் பதவி மூலம் செயல்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றம் ஆகியவற்றின் தாக்கம் மற்றும் அவரை விடுவிப்பதால் சமூகத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் போன்ற சில காரணிகள் மனுதாரரை தற்போதைய வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு எதிராக இந்த நீதிமன்றத்தை நிா்பந்திக்கின்றன.
முன்கூட்டியே சட்டவிரோதப் பணம் வடிவில் சுமாா் ரூ.100 கோடி குற்ற வருவாய் உருவாக்கிய விவகாரத்தில் சிசோடியாவுக்கு தொடா்பு இருந்தது என்பது ஆதாரங்களில் இருந்து வெளிப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது ‘தெற்கு லாபி’ மூலம் சக குற்றம்சாட்டப்பட்ட நபரான அபிஷேக் போயின்பல்லி மூலம் மற்றொரு சக குற்றம்சாட்டப்பட்ட விஜய் நாயருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுபான வியாபாரத்தில் பல்வேறு சதிகாரா்கள் மற்றும் பங்குதாரா்களுடன் நடத்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்று, சதிகாரா்கள் மற்றும் காா்டெல் உறுப்பினா்களுக்கு தேவையற்ற பணப் பலன்களை வழங்கியதற்காக சிசோடியா, அவரது பிற அரசியல் சகாக்கள் சாா்பில் அந்தத் தொகை பெறப்பட்டுள்ளது.
கலால் கொள்கையின் சில விதிகளைக் கையாள்வதன் மூலமும், சதிகாரா்களின் நலனுக்காக அதில் சில சாதகமான உள்பிரிவுகளைச் சோ்ப்பதன் மூலமும் காா்டெல் உருவாக்க அனுமதிக்கப்பட்டிருந்தது என அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, சிசோடியா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், புலன்விசாரணைக்கு தனது காவல் நீட்டிக்கப்பட வேண்டிய தேவை எழவில்லை என்றும், இதனால் ஜாமீன் அளிக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால், அமலாக்கத் துறை தரப்பில் ஜாமீன் அளிக்க எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்து. மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரித்து வரும் ஊழல் வழக்கில் சிசோடியாவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. தற்போது ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் வரி 2021-22ஐ உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாக சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...