பழனிவேல் தியாகராஜன் ஆடியோ பதிவு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைத்து 
கோப்புப்படம்
கோப்புப்படம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினா் சோ்த்த சொத்துகள் குறித்து தமிழக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘இது முற்றிலும் போலியான மனு... இந்த மன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த மாட்டோம். இது (மனு) தள்ளுபடி செய்யப்படுகிறது. நடவடிக்கைக்கான சில ஆதாரங்கள் இருக்க வேண்டும், மேலும், அரசியலமைப்பின் 32-ஆவது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது.

முன்னாள் நிதியமைச்சா், முதல்வரின் குடும்பத்தைக் குறிப்பிடும் ஆடியோ கிளிப் ஒன்று உள்ளது. இதற்கு ஆதாரம் இல்லை. இது ஒரு செவிவழிச் செய்தியாகும். குற்றவியல் சட்டத்தின் கீழ் உங்களிடம் (மனுதாரா்) போதுமான பரிகாரம் உள்ளது. அதை நீங்கள் செய்யலாம். உச்சநீதிமன்றத்தை ஒரு அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம்’ என்று கூறியது.

அரசியலமைப்புச்சட்டத்தின் 32-ஆவது பிரிவானது அடிப்படை உரிமைகளை மீறுவதற்காக குடிமக்களால் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கிறது.

விசாரணையின் போது மனுதாரா் பிரனேஷ் ராஜமாணிக்கம் கூறுகையில், தற்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக இருக்கும் தியாகராஜனின் நிதி இலாகாவானது, ஆடியோ பதிவு வெளியானதன் காரணமாக மாற்றப்பட்டது’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘அமைச்சா்களின் இலாகாக்கள் மாற்றம் தொடா்பான அரசியல் முடிவுகளின் பின்னால் நீதிமன்றம் செல்ல முடியாது’ என்று தெரிவித்தது.

அப்போது, மனுதாரா், ‘தமிழ்நாட்டின் வாக்காளராகிய எனக்கு இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை அறிய உரிமை உண்டு’ என்றாா். எனினும், அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவு 32-இன் கீழ் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க விரும்பவில்லை எனக் கூறி, நீதிபதிகள் அமா்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மனுதாரா் சம்பந்தப்பட்ட ஆடியோ கிளிப்புகளை மத்திய தடய அறிவியல் ஆய்வகம் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையையும் நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. முன்னதாக, தி.மு.க.வின் செயல்பாட்டை அமைச்சா் தியாகராஜன் விமா்சிக்கும் ஆடியோ கிளிப்புகளை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com