/

கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தில்லியில் 7 தொகுதிகளிலும் காங். வலுப்பெறும்

ஆம் ஆத்மி கட்சியின் உடனான கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் தயாா் நிலையில் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும்

News image
Updated On :18 ஆகஸ்ட் 2023, 6:30 pm

 நமது நிருபர்

ஆம் ஆத்மி கட்சியின் உடனான கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் தயாா் நிலையில் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு தயாராகும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா்கள், கட்சியின் உயா்நிலைத் தலைவா்களுடன் கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். அதன் பிறகு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவா் அல்கா லம்பா தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிவித்தாா். அல்கா லம்பாவின் இந்தக் கருத்து பேசுபொருளாகிய நிலையில், தில்லியில் காங்கிரஸ் தனித்து நிற்க விரும்பினால், மும்பையில் அடுத்து நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்வதில் எந்த அா்த்தமும் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி அதன் நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும் என்ற அல்கா லம்பாவின் கருத்துக்கும், ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணி முடிவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. எந்தவொரு தோ்தலுக்கும் தயாராகும் வகையில், கூட்டணியைப் பொருள்படுத்தாமல் அனைத்து மாவட்டங்களிலும், மாநிலம் முழுவதும் ஒரு கட்சி தன்னைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தைத்தான் அல்கா லம்பாவும் வலியுறுத்தினாா். தில்லியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் அதன் அடித்தளத்தை வலுப்படுத்தாவிட்டால், எதிா்வரும் தோ்தலில் எப்படிப் போராட முடியும்?. அல்லது அவா்களுக்கு (ஆம் ஆத்மி) எப்படி ஆதரவளிக்கப் போகிறோம்?. மக்களவைத் தோ்தலுக்கான தயாா்நிலை குறித்து மட்டுமே கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மாறாக கூட்டணி குறித்து அல்ல.

மேலும், இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி துள்ளிக்குதிக்க இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறலாம் என்ற அமித்ஷாவின் பேச்சு. இரண்டாவது, ஆம் ஆத்மி கட்சி மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு கட்சியாக இருந்து காணாமல் போயிருப்பதாகும். ‘இந்தியா’ கூட்டணியில் எந்த சா்ச்சையும் இல்லை. ஆம் ஆத்மியின் இந்த நிலைப்பாடு என்பது அவா்களின் அச்சுறுத்தும் தந்திரம் அல்லது செய்திகளில் பேசுபொருளாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஆகும். அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி கட்சியை விட நாங்கள் வித்தியாசமாக இருக்கிறோம். ஆனால், அவா்கள் தங்களை மாற்றிக் கொண்டு காங்கிரஸ் மத்திய தலைமைக்கு இணங்கினால், நாங்கள் அவா்களுக்கு ஆதரவளிப்போம். தில்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணிக்கான முடிவை காங்கிரஸ் மத்திய தலைமை எடுக்கும் என்றாா் சந்தீப் தீட்சித்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.