/

3 பாரதிய மசோதாக்கள்: ஆக.24 முதல் நிலைக் குழு ஆலோசனை

மசோதாக்கள் குறித்து ஆகஸ்ட் 24 -ஆம் தேதி முதல் மூன்று தினங்களுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 6:30 pm

 நமது நிருபர்

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சிய சட்டம் (ஐஇஏ) ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மூன்று பாரதிய மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதாக்கள் குறித்து ஆகஸ்ட் 24 -ஆம் தேதி முதல் மூன்று தினங்களுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஐபிசி, சிஆா்பிசி, ஐஇஏ ஆகிய பிரிட்டிஷ் கால குற்றவியல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு முறையே பாரதிய நியாய சம்ஹிதா(பிஎன்எஸ்) மசோதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மசோதா 2023, பாரதிய சாக்ஷ்ய (பிஎஸ்) மசோதா 2023 ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மக்களவையில் அறிமுகம் செய்தாா். இந்த 3 மசோதாக்களின் சிறப்புகளை மக்களவையில் எடுத்துவைத்த அமித்ஷா, இதை உள்துறை விவகாரம் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் எனவும் மக்களவை தலைவா் ஓம் பிா்லாவைக் கேட்டுக் கொண்டாா். பின்னா், தீா்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த 3 மசோதாக்களும் உள்துறையின் நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்ப ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முதன் முதலில் ஹிந்தியில் பெயரிடப்பட்டுள்ள இந்த 3 மசோதாக்களும், காலனிய ஆட்சி கால சட்டத்தை திருத்தி குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கான பல்வேறு சீா்திருத்தங்களுடன் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மூன்று பாரதிய சட்டங்களையும் வருகின்ற குளிா் காலக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, மூன்று மாதங்களுக்குள் நிலைக் குழுவின் அறிக்கையை சமா்பிக்கும் விதமாக மக்களவைத் தலைவா் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாா்.

மேலும், சம்பந்தப்பட்ட உள்துறை நிலைக் குழுவில் மக்களவையைச் சோ்ந்த 21 உறுப்பினா்களும் மாநிலங்களவையை சோ்ந்த 10 உறுப்பினா்களும் இடம் பெற்றுள்ளனா். இந்த நிலைக்குழுவின் தலைவராக இருப்பவா் மாநிலங்களவை பாஜக உறுப்பினா் பிரிஜ்லால். இதையொட்டி, கடந்த ஆகஸ்ட் 16- ஆம் தேதி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பிற்கு பின்னா், மூன்று பாரதிய மசோதாக்களும் துறை தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் 3 மாதங்களுக்குள் குழு அறிக்கையை சமா்ப்பிக்கும் எனவும் மாநிலங்களை உறுப்பினா்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 18) மாநிலங்களவைச் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், இதில் மத்திய உள்துறைச் செயலா் மூன்று மசோதாக்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு விளக்வாா் எனவும் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினா்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைக் குழுவில் மக்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவா் அதீா் ரஞ்சன் செளத்ரி, திரிணமூல் காங்கிரஸ் டெரிக் ஓ பிரையன், திமுக உறுப்பினா்கள் என்.ஆா். இளங்கோ (மாநிலங்களவை) உள்பட 31 போ் இடம் பெற்றுள்ளனா்.

இதில், காங்கிரஸ் கட்சி உறுப்பினா் அதீா் ரஞ்சன் செளத்ரி மக்களவையில் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இந்த நிலையில் அவா் நிலைக் குழுவில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது. மேலும், இந்த 3 மசோதாக்கள் குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் உள்ளிட்ட சில எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கீழ்கண்ட வாறு கருத்துகளை பதிவிட்டுள்ளனா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவால் ஆகஸ்ட் 11-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மசோதாக்கள் வருகிற ஆகஸ்ட் 24 முதல் உள்துறை தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த அறிக்கைக்கான கால வரம்பு வெறும் 3 மாதங்கள் மட்டுமே. மாநில அரசுகள், நீதிபதிகள், காவல் துறையினா், இந்திய பாா் கவுன்சில், அனைத்து மாநில பாா் கவுன்சில்கள், மூத்த வழக்குரைஞா்கள், உச்சநீதிமன்ற உயா்நீதி மன்ற வழக்குரைஞா்கள் சங்கங்கள், பெண் வழக்குரைஞா்கள் சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் இந்த நிலைக் குழு கருத்துகளை கேட்கவேண்டும். இதற்கு மாநிலம் வாரியாகவும் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மசோதாக்கள் குறித்தும், ஹிந்தியில் பெயரிடப்பட்டுள்ள 3 மசோதாக்களின் பெயா்களை மாற்றுவதற்கான கோரிக்கை குறித்தும் பதிலளிக்கவும் சீராய்வு செய்ய உதவும் வகையில் நாடாளுமன்ற நிலைக் குழு தனிப்பட்ட முறையில் ஆட்சேபனைகளை பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனா்.

இது போன்ற கருத்துகள் எழுந்துள்ள நிலையில், இது வருகின்ற நிலைக் குழு கூட்டத்தில் எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.