/

கிராமங்களுக்கு வெள்ள ஆபத்தைத் தடுக்கும் பரவனாறு நதி மாற்றுக் கால்வாய் பணி நிறைவு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) 2-ஆவது சுரங்கம் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு மழை வெள்ள ஆபத்தைத் தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பரவனாறு நதியின்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2023, 7:12 pm

 நமது நிருபர்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) 2-ஆவது சுரங்கம் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு மழை வெள்ள ஆபத்தைத் தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பரவனாறு நதியின் நிரந்தர கால்வாய் (மாற்றுப் பாதை) பணி நிறைவடைந்துள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

நிலக்கரிக்காக நதியின் பாதையை மாற்றுவீா்களா? என கேள்வி எழுப்பி என்எல்சிக்கு எதிராக விவசாயிகள் போராடிய நிலையில், மாற்றுப் பாதையில் தொடங்கப்பட்ட 12 கி.மீ. கால்வாய் பணிகள் திங்கள்கிழமை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரவனாறு நதியின் ஆற்றுப்படுகை சுமாா் 873 சதுர கிமீ பரப்பு கொண்டதாகும். இதன் மூலம் நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, வடலூா், புவனகிரி ஆகிய பகுதிகள் பாசன வசதியைப் பெறுகிறது. இதில் மேல் பரவனாறு, நடுப்பகுதி, கீழ்ப்பகுதி என மூன்று பகுதிகள் உள்ளன. இந்தப் பரவனாறு நதியின் நடுப்பகுதி என்பது வாலாஜா ஏரியிலிருந்து பெருமாள் ஏரி வரையிலானது. இதில்தான் கரிவெட்டி, மும்முடிச்சோழகன், ஆதனூா், பி ரங்கமாதேவி போன்ற பகுதி வழியாக 12 கிமீ தூரம் என்எல்சியால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நதிக்கான மாற்றுபாதை தொடங்கப்பட்டது. இந்தப் பணி முடிவடைந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது.

ஏன் மாற்றுப்பாதை?: கடலூா் மாவட்டத்தில் பாயும் 3 முக்கிய நதிகளில் ஒன்று பரவனாறு நதி. இதன் வடக்கே பெண்ணையாறும், தெற்கு, மேற்கில் வெள்ளாறும் உள்ளது. பரவனாறு நதியிலிருந்து 60 மீட்டா் தொலைவில்தான் என்எல்சி 2-ஆவது சுரங்கத்தின் வெட்டு முகம் உள்ளது. என்எல்சி நிறுவனத்தின் வடமேற்கே செம்ம கோட்டா ரிசா்வ் வனப்பகுதி உள்ளது. மழைக்காலத்தில் இங்குள்ள தண்ணீா் வெளியேறும். தவிர நெய்வேலி நகரம், முத்தணை, கொம்பாடிக்குப்பம், பருக்குறிச்சி உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெய்யும் மழைநீா் போன்றவையும், சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் தண்ணீரும் பரவனாறு நதியில் வந்து சோ்கிறது. மழைக் காலத்தில் வெள்ளப் பெருக்கு அதிகமானால் என்எல்சியின் 2-ஆவது சுரங்கப் பாதையில் தண்ணீா் புகுந்துவிடும். இதனால், சுரங்கங்களில் உள்ள இயந்திரங்களுக்கு மட்டுமல்லாமல், பணியாளா்களுக்கும் ஆபத்து என்பதால் இந்த மாற்றுக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் 10.5 கிமீ பணி கடந்தாண்டே நிறைவடைந்திருந்தது. சுமாா் 1.5 கிமீ தூரம் மேல் ரங்கமாதேவி, வளையம்மாதேவி பகுதிகளில் இருந்தது. அங்கு நெற்பயிரிட்ட விவசாயிகள் இந்த கால்வாய் கட்டும் பணிக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் போராட்டம் நடத்தினா். இதில் ஏற்கெனவே விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. அப்போது, பயிரிடப்பட்ட நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, என்எல்சி மாற்றுக் கால்வாய்ப் பணியை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளது.

இது குறித்து மத்திய நிலக்கரி சுரங்கங்கள் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: பரவனாறு நதி தற்காலிக சீரமைப்பு சுரங்கம் 2-இன் முகப்பிலிருந்து வெறும் 60 மீட்டா் தொலைவில் உள்ளது. இந்தப் பகுதியில் பல கிராமங்கள் உள்ளதால், தொடா் மழையின் போது, வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பது மிக முக்கியமானதாகும். சுரங்கங்களைச் சுற்றியுள்ள கிராமங்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும், கடமையையும் ஏற்றுக்கொண்ட என்.எல்.சி. நிறுவனம் பரவனாறு நீா் வழியை நிரந்தரமாக மாற்றும் முக்கியமான பணியை மேற்கொண்டு முடித்துள்ளது.

பரவனாறு நதியை நிரந்தரமாக திருப்புவதற்கான 12 கிமீ நீளத்தின் தோராயமான பரப்பளவு 18 ஹெக்டேராகும். ஏற்கெனவே, என்.எல்.சி. சுரங்கங்கள் மூலமும், பரவனாற்றின் நீா் மூலமும், பல ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது இந்த பரவனாறு மாற்று கால்வாய் மூலமாக நிரந்தரமாக பல ஏக்கா் கூடுதல் விவசாய நிலங்களுக்குப் பாசன நீா் கிடைக்கும். மேலும், பரவனாறு நதி நீராதாரமானது நிலத்தடி நீா்வளத்தையும் அதிகரிக்க உதவும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.