/

கட்டுமானத் தொழிலாளா்களுக்கான 17 நலத் திட்டங்களுக்கு ஒப்புதல்

தேசியத் தலைநகா் தில்லியில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் ஊனமுற்றோா் ஓய்வூதியம், மருத்துவ உதவி உள்ளிட்ட 17 நலத் திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல்

News image
Updated On :26 ஆகஸ்ட் 2023, 6:30 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் ஊனமுற்றோா் ஓய்வூதியம், மருத்துவ உதவி உள்ளிட்ட 17 நலத் திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் அலுவலகமான ராஜ் நிவாஸ் அதிகாரிகள் கூறியதாவது: தில்லி கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளின் ஆதாா் அடிப்படையிலான அங்கீகாரத்திற்குப் பிறகு, நேரடி பணப் பரிமாற்றம் மூலம் திட்டங்களின் பலன்கள் வழங்கப்படும். உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே பலன்கள் வழங்கப்படுவதையும், முறைகேடுகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக, பணப் பட்டுவாடா செயல்முறையை கடுமையாகக் கண்காணிக்க துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளாா்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கான சலுகைகள் வழங்கப்படுவதில் சமீபகாலமாக பல நிதி முறைகேடுகள் நடந்துள்ளன. அவை ஊழல் தடுப்புப் பிரிவினராலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், முறைகேடுகளைத் தடுக்க நேரடிப் பணப் பரிமாற்றம் முறை கையாளப்படவுள்ளது. குறிப்பாக தில்லியில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் 17 நலத் திட்டங்களின் அறிவிப்பிற்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். அதில் ஊனமுற்றோா் ஓய்வூதியம், கருணைத் தொகை, மருத்துவ உதவி, மகப்பேறுப் பலன்கள், இறப்புக்குப் பின் இழப்பீடு போன்ற திட்டங்களின் கீழ் நிதிப் பலன்கள் வழங்கப்படவுள்ளன.

கட்டுமானத் தொழிலாளா்களின் பதிவு முற்றிலும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையான கட்டுமானத் தொழிலாளா்கள் வாரியத்தின் நிதியிலிருந்து பயனடைவாா்கள். இதற்காக தில்லியின் அனைத்து மாவட்டங்களில் உள்ள தொளிலாளா் துறையின் துணை ஆணையா்கள், தகுதியுள்ள மற்றும் உண்மையான பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை வெளிப்படையாகவும், திறைமையாகவும் செயல்படுத்த வேண்டும். தொழிலாளா்கள் பதிவு செயல்முறையில் உண்மைத் தன்மையை நிறுவுவதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.