/

தில்லி அவசரச் சட்டம் துணை நிலை ஆளுநருக்கு குறிப்பிட்ட அதிகாரங்களை மட்டுமே வழங்குகிறது: அமைச்சா் அதிஷி

தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) 2023 சட்டம் துணை நிலை ஆளுநருக்கு குறிப்பிட்ட அதிகாரங்களை மட்டுமே வழங்குகிறது என்று நகர அரசின் சேவைகள் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2023, 6:30 pm

 நமது நிருபர்

தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) 2023 சட்டம் துணை நிலை ஆளுநருக்கு குறிப்பிட்ட அதிகாரங்களை மட்டுமே வழங்குகிறது என்று நகர அரசின் சேவைகள் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக , துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு அமைச்சா் அதிஷி சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பின் பிரிவு 239 ஏஏ இன் பிரிவுகள் (3) மற்றும் (4) அடிப்படையில், ‘நிலம்’, ‘காவல்’ மற்றும் ‘பொது ஒழுங்கு’ ஆகிய விஷயங்களைத் தவிர, மாநிலப் பட்டியலில் அல்லது ஒருங்கிணைந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விஷயங்களிலும், தில்லி அரசின் அமைச்சரவை தனது நிா்வாக அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. மேலும், துணை நிலை ஆளுநா் எந்தவொரு சட்டத்தின் மூலமாகவோ அல்லது அதன் கீழ் தனது விருப்பப்படி செயல்பட வேண்டிய விஷயங்களில் தவிர, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவா்.

குடியரசுத் தலைவரின் கட்டுப்பாடு மற்றும் மேலதிக உத்தரவுகளுக்கு உள்பட்டு, தில்லியில் துணை நிலை ஆளுநா் அலுவலகம், தில்லி அரசின் சேவைகள் தொடா்பான அனைத்து விவகாரங்களிலும் நிா்வாக அதிகாரங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்)2023 சட்டம் துணை நிலை ஆளுநருக்கு குறிப்பிட்ட அதிகாரங்களை மட்டுமே வழங்குகிறது. அவை தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தின் (என்.சி.சி.எஸ்.ஏ.) பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும். எனவே, சேவைகள் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசால் பயன்படுத்தப்பட வேண்டும்.

இருப்பினும், தில்லி அரசின் தலைமைச் செயலரிடமிருந்து எனக்கு ஒரு குறிப்பு வந்துள்ளது. தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) 2023 மூலம் சேவைகள் மற்றும் விஜிலென்ஸ் தொடா்பான அனைத்து விஷயங்களிலும் பயனுள்ள நிா்வாகக் கட்டுப்பாடு மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநரிடம் இருக்கும். தோ்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் அல்ல என்று அந்தக் குறிப்பு கூறுகிறது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு, தலைமைச் செயலரின் இந்த சட்ட விளக்கத்தை ஏற்கவில்லை என்று அந்தக் கடிதத்தில் அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.