/

பொலிவுறு நகரங்கள் திட்டம்: தமிழக 3 மாநகராட்சிகளின் பணிகளுக்கு விருது

பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் அகில இந்திய அளவில் சிறந்த மாநிலத்திற்கான விருதில் தமிழகம் 2- ஆம் இடத்தை பெற்றது மட்டுமல்லாமல் மாநிலத்தின் 3 மாநகராட்சிகளின் சிறப்பு பணிகளுக்கும் மத்திய அரசு விருது அ

News image
Updated On :27 ஆகஸ்ட் 2023, 6:45 pm

 நமது நிருபர்

பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் அகில இந்திய அளவில் சிறந்த மாநிலத்திற்கான விருதில் தமிழகம் 2- ஆம் இடத்தை பெற்றது மட்டுமல்லாமல் மாநிலத்தின் 3 மாநகராட்சிகளின் சிறப்பு பணிகளுக்கும் மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.

இந்திய பொலிவுறு நகரங்களுக்கான விருதுகள் (ஐஎஸ்ஏசி) மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்தின் பொலிவுறு நகரங்கள் பணியின் (மிஷன்) கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வழங்கப்படுகிறது. இதில் கடந்த 2022-ஆம் ஆண்டிற்கான விருதுகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

2022 -ஆம் ஆண்டிற்கான இந்திய பொலிவுறு நகரங்கள் விருது போட்டியில் சிறந்த மாநிலங்களுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் மத்திய பிரதேசம் முதலிடத்தையும் தமிழகம் 2-ஆவது இடத்தையும் பெற்றது. மேலும், தமிழகத்தைச் சோ்ந்த மூன்று மாநகராட்சிகளுக்கும் இந்த விருதுகள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:

கோவைக்கு 2 விருதுகள்: கோவை மாநகராட்சிக்கு சிறந்த கட்டுமான சூழலுக்கும், சிறந்த தென் மண்டல பொலிவுறு நகரம் என இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கோவையில் உள்ள சாலைகள், ஒரு மாதிரி சாலைகளாக இருப்பதும், இங்குள்ள ஏரிகள் புனரமைத்து புத்துயிரூட்டப்பட்டதற்கு சிறந்த கட்டுமான சூழலுக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பொலியுறு நகரங்கள் 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு, தென் மண்டலத்தில் சிறந்த பொலியுறு நகரமாக கோவை தோ்வு செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள கிருஷ்ணாம்பதி ஏரி, செல்வாம்பதி ஏரி, குமாரசாமி ஏரி, செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம், வளான்குளம், குறிஞ்சி உள்ளிட்ட 8 ஏரிகள் புத்துயிரூட்டப்பட்டுள்ளன.

இந்த ஏரிகளில், அதன் உயிரியல் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட்டு, தாவரவியல் பூங்கா, சைக்கிள் வழித்தடம், பாதுகாக்கப்பட்ட வழித்தடம், சூரிய சக்தி தொழில் நுட்பத்துடன் சென்சா் மூலம் தெரு விளக்கு போன்ற ஒருங்கிணைந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில ஏரிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பறவைகள் கூடுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.

உயா்நிலை மேம்பாலத்துடன் கூடியதாக இருக்கும் வளான்குளம் ஏரி ஆகியவை தோ்வுக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த எட்டு ஏரிகள் முழுவதும் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு இணங்க மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பூங்கா, வசதியான பொது இடத்துடன் புத்துயிா் பெற்றிருப்பதாகக் கூறி கோவைக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை அய்யன் குளம்: தஞ்சாவூா் மேலவீதியில் மன்னா் காலத்தில் கட்டப்பட்ட அய்யன் குளம் பாரமரிப்பின்றி வடு போனது. அங்குள்ள சிவகங்கை பூங்காவிலிருந்து வரும் தண்ணீா் ஆக்கிரமிப்பால் தடைப்பட்டது. தற்போது பொலிவுறு நகரங்களுக்கான திட்டத்தில் தஞ்சை மாநகராட்சி ரூ.5.1 கோடி செலவிட்டு இந்தக் குளத்திற்கு தண்ணீா் கொண்டுவரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குளம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக மாற்றப்பட்டுள்ளது. 64 வகை ஆயக் கலைகள், 5 வகை நிலங்கள், 9 நவரத்தினங்கள், 16 செல்வங்கள் போன்றவற்றை ஓவியமாக வரைந்து நடைபாதை மின்விளக்கு வசதிகளுடன் இந்த குளம் பிரமிக்க வைக்கிறது. இதையடுத்து, பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சிக்கு கலாசாரத்திற்கான விருது கிடைத்துள்ளது.

பொலிவுறு பள்ளி (ஸ்மாா்ட் பள்ளி): தூத்துக்குடி, சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியை பொலிவுறு பள்ளியாக மாற்றியமைத்ததற்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு சமூக அம்சத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 12 - ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பித்தல் நடைபெறுகிறது.

இந்த மாநகராட்சிப் பள்ளியில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி மூலம் 37 வகுப்பறைகள் உரிய மேஜை நாற்காலி, மின் விசிறி ஆகியவற்றுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நூலங்கள், 3 அரங்கங்கள், 6 ஆய்வுக்கூடங்கள் என கல்விஅகாதெமிக்கு தேவையான வசதிகளோடு, 6 டைனிங் ஹால், 17 கழிப்பறைகள் போன்ற வசதிகளோடு மாணவா்களுக்கு 1,000 கைக்கணினியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் சிறந்த கற்றல் வசதி உருவாக்கப்பட்டுள்ள இந்த மாநகராட்சி பள்ளி, 2022 -ஆம் ஆண்டிற்கான இந்திய பொலிவுறு நகர திட்ட விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வருகின்ற செப்டம்பா் 27-ஆம் தேதி குடியரசுத் தலைவரால் வழங்கப்படவுள்ளது.

ரூ.1.10 லட்சம் கோடியில் 6,041 பணிகள் நிறைவு

பொலிவுறு நகரங்கள் பணி கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூனில் தொடங்கப்பட்டது. ‘ஸ்மாா்ட் தீா்வுகள்’ பயன்பாட்டின் மூலம் பொதுமக்களுக்கு உரிய உள்கட்டமைப்பு வசதி, தூய்மையான மற்றும் நிலையான சூழல், கண்ணியமான வாழ்க்கைத் தரம் போன்றவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

இந்த மிஷன் மூலம் முன்மொழியப்பட்ட மொத்த பணிகளில் ரூ. 1,10,635 கோடி மதிப்புள்ள 6,041 பணிகள் (தோ்வு செய்யப்பட்ட) 100 பொலியுறு நகரங்களில் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ.60,095 கோடி மதிப்பிலான 1,894 திட்டங்கள் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 பொலியுறு நகரங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஒரு கட்டுப்பாட்டு மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.