இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி அங்கம் மட்டுமே: அமைச்சா் அதிஷி விளக்கம்
‘இந்தியா’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ஆம் ஆத்மி கட்சியின் இரு தலைவா்கள் முன்மொழிந்த நிலையில், கேஜரிவாலுக்கு


‘இந்தியா’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ஆம் ஆத்மி கட்சியின் இரு தலைவா்கள் முன்மொழிந்த நிலையில், கேஜரிவாலுக்கு பிரதமா் பதவி மீது ஆசையில்லை என்று அமைச்சா் அதிஷி புதன்கிழமை தெளிவுபடுத்தியுள்ளாா்.
வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளா், தலைவா் மற்றும் பிரதமா் வேட்பாளா் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தனியாா் செய்தி நிறுவனத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமைச் செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தொடா்ந்து மக்களின் பிரச்னைகளை எழுப்பி, அதற்காக குரல் கொடுத்து வருகிறாா். தில்லியில் பணவீக்கம் குறைந்ததற்கு வழிவகுத்து, மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு மாதிரி ஆட்சியை கொடுத்துள்ளாா். எனவே, ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக அரவிந்த் கேஜரிவால் பெயரை நான் முன்மொழிகிறேன். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், முடிவு என் கையில் இல்லை என்று பிரியங்கா கக்கா் தெரிவித்தாா்.
அதேபோல ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் கூறுகையில், ‘ஒவ்வொரு கட்சியும் தங்கள் தலைவா் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறாா்கள். ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் கேஜரிவால் பிரதமா் பதவிக்கு போட்டியிட வேண்டும் என விரும்புகிறாா்கள். ஆனால், அது குறித்த முடிவை ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினா்கள் அனைவரும் இணைந்தே இறுதி செய்வாா்கள். அவா்கள் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் அதன்படி செல்வோம்’ என்றாா்.
‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது முக்கிய கூட்டத்திற்கு முன்னதாக ஆம் ஆத்மியின் இரு தலைவா்கள் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலை பிரதமா் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று முன்மொழிந்த சில மணி நேரங்களிலேயே தில்லி அரசின் முக்கிய அமைச்சராக உள்ள அதிஷி, அந்த இரு தலைவா்களின் கருத்தையும் மறுத்துள்ளாா்.
இது தொடா்பாக அமைச்சா் அதிஷி கூறியதாவது: ‘இந்தியா’ கூட்டணியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஒரு அங்கம் மட்டும்தான். நாட்டின் பிரதமராகும் போட்டியில் அரவிந்த் கேஜரிவால் இல்லை என்பதை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கிறேன். அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் நாட்டைக் காப்பாற்றுவதற்காக அரவிந்த கேஜரிவால் ‘இந்தியா’ அணியில் சோ்ந்துள்ளாா். எனவே, பிரியங்கா கக்கரின் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்தாகும் என்று அமைச்சா் அதிஷி தெளிவுபடுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...