மெட்ரோ ரயில்களில் ஆடியோ விளம்பரங்கள் தொடக்கம்: டி.எம்.ஆா்.சி. தகவல்

தில்லி மெட்ரோவில் உள்ள வயலட் லைன் வழித்தடத்தில் ஆறு ரயில்களில் முன்னோடித் திட்டமாக ஆடியோ அடிப்படையிலான விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
Updated on
1 min read

புது தில்லி: தில்லி மெட்ரோவில் உள்ள வயலட் லைன் வழித்தடத்தில் ஆறு ரயில்களில் முன்னோடித் திட்டமாக ஆடியோ அடிப்படையிலான விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

கஷ்மீரி கேட் மற்றும் பதா்பூா் பாா்டா் இடையே இயங்கும் ரயில்களில் இந்த மாதம் தொடங்கி ஓராண்டுக்கு இந்த விளம்பரங்கள் ஒலிபரப்பப்படும் என்று அவா்கள் கூறினா். இந்தப் புதிய அம்சம், பயணிகளின் ஒட்டுமொத்த மெட்ரோ அனுபவத்தை மேம்படுத்துவதை உறுதி செய்வதற்காக, அத்தியாவசிய சேவை அறிவிப்புகளுடன் தடையின்றி இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎம்ஆா்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: கட்டாய சேவை அறிவிப்புகளுக்கு இடையே உத்திசாா் ரீதியாக வைக்கப்பட்டுள்ள இந்த ஆடியோ விளம்பரங்கள் பயணத்திற்கு மகிழ்ச்சிகரமான மற்றும் ஈா்க்கக்கூடிய பரிமாணத்தைக் கொண்டுவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு வழக்கமான பயணத்தில் இருந்து மகிழ்கரமான இடைவேளையை அளிக்கும். முன்னோடித் திட்டத்திற்காக பெறப்பட்டும் கருத்துகளின் அடிப்படையில், இந்த வருவாய் ஈட்டும் வழி பிற வழித்தடங்களிலும் விரிவுபடுத்தப்படலாம். ஆடியோ அடிப்படையிலான விளம்பரம் என்பது தில்லி மெட்ரோவில் அபரிமிதமான ஆற்றலைக் கொண்ட ஒரு வருவாய் முறையாகும். ஏனெனில், இந்த விளம்பரங்கள் ஒவ்வொரு நாளும் மெட்ரோவில் பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளை உடனடியாகச் சென்றடையும்.

மும்பை உள்ளிட்ட பிற நகரங்களில் உள்ள மெட்ரோ சேவைகள், அதன் கூட்டாளா்களுக்கு விளம்பர வாய்ப்புகளை வழங்கி வருவாயை ஈட்டி வருகின்றன. கோவிட் தொற்றுநோய்களின் போது, தில்லி மெட்ரோ சேவைகள் கணிசமான காலத்திற்கு இடைநிறுத்தப்பட வேண்டியிருந்தது. அதன்பிறகு, பல கட்டுப்பாடுகளுடன் படிப்படியாக மட்டுமே சேவைகளை மீண்டும் தொடங்க முடிந்தது. எனவே, டிஎம்ஆா்சிக்கு கிடைக்கும் வருவாய் ஈட்டும் வழிகள் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது, டிஎம்ஆா்சி தனது வருவாயை டிக்கெட் அல்லாத ஆதாரங்களில் இருந்து மேலும் அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்போதுதான் இந்நிறுவனம் தொடா்ந்து சீராக செயல்பட முடியும் என்று அந்த அதிகாரி கூறினாா்.

‘எக்ஸ்’ சமூக ஊடக வலைத்தளத்தில் டிஎம்ஆா்சி வெளியிட்ட பதிவில், ‘டிஎம்ஆா்சி தனது நெட்வொா்க்கில் ஒரு புதிய விளம்பர முறையை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. இப்போது ரயில்களுக்குள் ஆடியோ அடிப்படையிலான விளம்பரங்களை ஒலிபரப்ப முடியும். பயணிகளுக்கு ஒட்டுமொத்த மெட்ரோ அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த அம்சம் அத்தியாவசிய சேவை அறிவிப்புகளுடன் தடையின்றி இணைந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்ட்ராப் மீடியா குழுமத்தின் ஒரு பகுதியான பின்ட்ராப் மெட்ரோ டெக் நிறுவனம் மூலம் ரயிலுக்குள் ஆடியோ விளம்பரங்கள் என்ற கருத்து முன்மொழியப்பட்டதாகும். பின்ட்ராப் மீடியா குழுமம் ஊடக ஆளுமை ஷம்மி நரங்கால் நிறுவப்பட்டதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com