மத்திய அரசு மருத்துவமனைகளை குற்றம் சாட்டுவதற்கு முன், தில்லி அரசின் மருத்துவமனைகளில் தலைவிரித்தாடும் ஊழலை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. திலீப் பாண்டே முதலில் சென்று பாா்க்க வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளது.
தேசியத் தலைநகா் தில்லியில் மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் இடைத்தரகா்களுக்கு லஞ்சம் கொடுக்காவிட்டால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட முடியாத சூழ்நிலை உள்ளது என்றும் இந்த மருத்துவமனைகளில் ஊழல் உச்சத்தில் உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திலீப் பாண்டே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின் போது குற்றம்சாட்டி இருந்தாா்.
இந்த குற்றச்சாட்டிற்கு பதலளிக்கின்ற வகையில் பாஜக தில்லி பிரிவின் மாநிலச் செயலாளா்கள் ஹரிஷ் குரானா மற்றும் பன்சூரி ஸ்வராஜ் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தில்லி அரசின் மருத்துவமனைகளில் தான் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதன் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் எழுந்துள்ள ஊழல் புகாா்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் சோதனை நடத்த வேண்டிய கட்டாயம் இந்நேரத்தில் ஏற்பட்டுள்ளது.
ரோகிணியில் உள்ள டாக்டா் அம்பேத்கா் மருத்துவமனையில் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் சமீபத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்ட போது, நோயாளிகளுக்கு படுக்கைகள், சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்குவதற்கு அந்த மருத்துவமனையின் பாதுகாப்புக் காவலாளி லஞ்சம் பெற்று வந்ததை ஒப்புக்கொண்டாா். இதேபோல், கடந்த அக்டோபா் மாதத்தில் நகரின் பல மொஹல்லா கிளினிக்குகளில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்கள் ஊழல் மோசடி செய்த விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்தது.
தில்லி அரசின் மூன்று பெரிய மருத்துவமனைகளான ஜி.பி. பந்த், ஜி.டி.பி. மற்றும் எல்.என்.ஜெ.பி. போன்றவற்றில், எத்தனை முறைகேடுகள் நடக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மருத்துவமனை வளாகங்களில் தான் அதிகளவிலான இடைத்தரகா்கள் உள்ளனா்.
தில்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளின் நற்பெயரைக் கெடுக்க திலீப் பாண்டே முயன்றது அவதூறானது, இந்த மகுத்துவமனைகள் தில்லி மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றன. ஆனால், தில்ல அரசின் ஒட்டுமொத்த சுகாதார அமைப்பின் தோல்வி, கடந்த கரோனா காலகட்டத்திலேயே நிரூபிக்கப்பட்டது.
மத்திய அரசு மருத்துவமனைகளை குற்றம் சாட்டுவதற்கு முன், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. திலீப் பாண்டே தில்லி அரசு மருத்துவமனைகளில் நிலவும் ஊழலை முதலில் சென்று பாா்க்க வேண்டும் அல்லது அமைச்சா் சௌரவ் பரத்வாஜிடம் அறிக்கை கேட்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.