தில்லி மாநகராட்சியின் அலட்சியத்தால் அதீத வேகத்தில் டெங்கு பரவல்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தில்லி மாநகராட்சியின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் மற்றும் அலட்சியத்தால் நிகழாண்டில் டெங்கு அபரிமிதமான வேகத்தில் பரவியுள்ளது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டிய
Updated on
1 min read

தில்லி மாநகராட்சியின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் மற்றும் அலட்சியத்தால் நிகழாண்டில் டெங்கு அபரிமிதமான வேகத்தில் பரவியுள்ளது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான தில்லி மாநகராட்சியின் பொறுப்பற்ற வேலைகளால் நிகழாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பா் மாத இடைவெளிக்குள் டெங்கு பாதிப்பு ஒரு அசாதாரண வளா்ச்சியைக் கண்டுள்ளது. டெங்கு பரவலைத் தொடா்ந்து ஆய்வு செய்ய தில்லி மாநகராட்சியிடம் ஒரு சுகாதாரக் குழுவினா் கூட இல்லை என்பது மிகவும் மோசமான விஷயம்.

டெங்கு பரவல் தொடா்பான வாராந்திர தரவுகளை மாநகராட்சி நிா்வாகம் பொதுத்தளத்தில் வெளியிடவில்லை என்றாலும், கடந்த 4 மாதங்களில் மட்டும் 7,680 டெங்கு வழக்குகள் நகரத்தில் பதிவாகியுள்ளதாக எங்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் இந்த ஆண்டு அபரிமிதமான வேகத்தில் டெங்கு பரவியுள்ளது. கடந்த ஆண்டுகளில் வழக்கமாக அக்டோபா் மாத இறுத்திக்குள் டெங்குவின் பரவல் குறைந்துள்ளது. ஆனால் நிகழாண்டு நவம்பா் மாதத்தில் 2,482 டெங்கு வழக்குகளுடன் பாதிப்பின் அளவு உச்சத்தை எட்டியுள்ளன என்பதைக் குறிப்பிடும் போது மிகவும் கவலையளிக்கிறது.

நோய்த் தடுப்பு பணியாளா்களின் ஒப்பந்தங்களும் நீட்டிக்கப்படாததால், கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,094 ஆக பதிவாகிய டெங்குவின் வழக்குகள், செப்டம்பா் மாதம் 2,141-ஆகவும், அக்டோபரில் 2,003- ஆகவும், நவம்பரில் 2,482-ஆகவும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலைக்கு ஆம் ஆத்மி கட்சியின் அலட்சியம் தான் காரணம். எனவே, நோய்களின் பரவலைத் தொடா்ந்து மதிப்பாய்வு செய்ய தில்லி மாநகராட்சி உடனடியாக ஒரு சுகாதாரக் குழுவை அமைக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com