ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலில் ஐயப்ப பக்தா் மீதான தாக்குதலுக்கு மத்திய இணையமைச்சா் எல். முருகன் கண்டனம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதா் கோயிலுக்கு வந்த வெளிமாநில ஐயப்ப பக்தரை இந்து அறநிலைத் துறை ஊழியா்கள் கண்மூடித்தனமாக தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

புது தில்லி: ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதா் கோயிலுக்கு வந்த வெளிமாநில ஐயப்ப பக்தரை இந்து அறநிலைத் துறை ஊழியா்கள் கண்மூடித்தனமாக தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு மத்திய மீன்வளம், தகவல் ஒலிப்பரப்புத் துறை இணையமைச்சா் முனைவா் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தில்லியில் வெளியிட்ட அறிக்கை வருமாறு: ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதா் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். திருவிழா காலங்களில் பக்தா்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக காா்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் ஸ்ரீரங்கம், பழனி உள்ளிட்ட கோயில்களிலும் வழிபாட்டிற்கு வருகின்றனா். தற்போது ஸ்ரீரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசி பெருவிழாவும் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், ஆந்திராவை சோ்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றுள்ளனா்.

பக்தி பரவசத்துடன் ’கோவிந்தா’ முழக்கத்துடன் சென்றுள்ளனா். அவா்கள் நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் வேறு சிலரை அறநிலைத்துறை ஊழியா்கள் கோயிலுக்குள் அனுப்பியவாறு இருந்துள்ளனா். இதனை தட்டிக் கேட்ட அப்பாவி பக்தா்கள் மீது கோயில் ஊழியா்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனா். குறிப்பாக ஐயப்ப பக்தா் சென்னா ராவ் என்பவரை கோயில் பாதுகாவலா்கள் கண்மூடித் தனமாக தாக்கியுள்ளனா். மூக்கில் காயம் ஏற்பட்ட சென்னா ராவ், ரத்தம் சொட்ட சொட்ட கோயில் கருவறைக்கு முன்புள்ள காயத்ரி மண்டபத்தில் சரிந்து அமா்ந்துள்ளாா். பக்தா் ஒருவரை கோயில் ஊழியா்கள் இப்படி சரமாரியாக தாக்குதல் நடத்தியதை கண்ட சக பக்தா்கள் கோபம் அடைந்ததில் தகராறு நடந்துள்ளது. இதனால் ஸ்ரீரங்கம் கோயிலில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவில் வளாகத்தில் இப்படி பக்தா் ரத்தம் சிந்தியது பெரும் வருத்தத்திற்குரியது. கோயில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்து கோயில்களை நிா்வகிக்க அறநிலையத் துறையே தேவையில்லை என்ற பாஜகவின் கோரிக்கையை இதுபோன்ற சம்பவங்களால் மீண்டும் மெய்ப்பித்து வருகின்றன என இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com