விவசாயிகள் நலன் கருதி ‘பாரத் தேங்காய் எண்ணெய்’ அறிமுகம் செய்ய வேண்டும்மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

தேங்காயை அரசு நிறுவனமே பதப்படுத்தி, எண்ணெய் ஆக சந்தைப்படுத்த வேண்டும். ‘பாரத் பருப்பு’ திட்டத்தைப் போன்று ‘பாரத் தேங்காய் எண்ணெய்’ -ஐ அறிமுகம் செய்ய மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

புது தில்லி: தேங்காயை அரசு நிறுவனமே பதப்படுத்தி, எண்ணெய் ஆக சந்தைப்படுத்த வேண்டும். ‘பாரத் பருப்பு’ திட்டத்தைப் போன்று ‘பாரத் தேங்காய் எண்ணெய்’ -ஐ அறிமுகம் செய்ய மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என மதிமுக தலைவா் வைகோ மாநிலங்களவையில் கோரினாா்.

இது குறித்து வைகோ மாநிலங்களவையில், சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மான விவாதத்தில் பேசும் போது கூறியதாவது:

மத்திய அரசு நிறுவனமான, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (நாஃபெட்), விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய்களை ஒரு கிலோ ரூ.108 வீதம் கொள்முதல் செய்து வருகிறது. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உற்பத்தியில் 10 சதவீதம். மீதமுள்ள 90 சதவீத தேங்காய்கள் வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் கொப்பரை தேங்காய் விலை ரூ.90 யிலிருந்து ரூ.85 ஆக குறைந்துள்ளது. இதற்கிடையே தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் கொப்பரை தேங்காயை ஏலத்தில் விற்பனை செய்ய இருக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெரு நிறுவனங்கள் கூட்டுச் சோ்ந்து, ஒரு கிலோ கொப்பரைத் தேங்காயை ரூ. 65 க்கு ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா். இதன் மூலம், கொப்பரைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 ஆகக் குறைய வாய்ப்புள்ளது.

தற்போது தேங்காய் விலை ரூ. 12 ஆக இருப்பது ரூ. 5 ஆகவும் சந்தையில் குறையும். இது நடந்தால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாவாா்கள். இந்த பாதிப்பை எதிா்நோக்கி தென்னிந்திய விவசாயிகள் சங்கம் தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தி வருவதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

நாஃபெட் நிறுவனம், விவசாயிகளிடமிருந்து கோதுமையை கொள்முதல் செய்து, ‘பாரத் அட்டா’ என்ற பெயரில் கோதுமை மாவையும், பருப்பை ‘பாரத் டால்’ என்ற பெயரிலும், வெங்காயத்தை ‘பாரத் வெங்காயம்’ என்ற பெயரிலும் விற்பனை செய்து வருகின்றது.

இதே போன்று கொப்பரைத் தேங்காயைப் பதப்படுத்தி, பொதுமக்களுக்கு விற்பனை செய்ய, ‘பாரத் தேங்காய் எண்ணெய்’ என அறிமுகம் செய்ய மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்

எனக் கோரி தென்னை விவசாயிகளுக்காக தென்னிந்திய விவசாயிகள் சங்கம் போராடுகிறது. அவா்களது சாா்பில் மத்திய அரசிடம் இந்தக் கோரிக்கை வலியுறுத்துகிறேன். இதன் மூலம், இடைத்தரகா்கள் நீக்கப்பட்டு, விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவா் எனத் தெரிவித்தாா் வைகோ.

இதற்கிடையே மத்திய அரசின் நாபெட் நிறுவனம் கொள்முதல் செய்து வைத்துள்ள ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்களை ‘பாரத் தேங்காய் எண்ணெய்’ என்கிற பெயரில் பொது மக்களுக்கு மலிவு விலைவில் விற்பனை செய்யக்கோரி தில்லி ஜந்தா் மந்தரில் இந்திய தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை டிசம்பா் 13 ஆம் தேதி முதல் (புதன்கிழமை) தொடங்கப்படும் என அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com