தில்லி அதிகாரத்துவ சட்டத்தின் உருவ பொம்மைகளை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் எரித்ததன் மூலம் அக்கட்சியின் ‘அராஜக முகம்’ மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று பாஜ சாடியுள்ளது. இது தொடா்பாக பாஜகவின் கவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சி கடந்த வாரம் தனது அலுவலகத்தில் அவசரச் சட்டத்தின் நகல்களை எரிப்பதாக அறிவித்தது. ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு தில்லி அரசு இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே நாங்கள் நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருப்போம் என்றும் கூறி நகல் எரிப்பு போராட்டத்தை ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து அவசரச் சட்டத்தின் உருவ பொம்மைகளை எரிக்கும் போராட்டத்தை ஒத்திவைத்திருந்த ஆம் ஆத்மி கட்சி, திடீரென பின்வாங்கியது ஏன் என்பது புரியவில்லை என்று அறிக்கையில் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.