ஜனக்புரியில் சாலையில் பள்ளம்: போக்குவரத்து நெரிசல்
கழிவுநீா் கால்வாய் கசிவு காரணமாக மேற்கு தில்லியின் ஜனக்புரியில் சாலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் பள்ளம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.


கழிவுநீா் கால்வாய் கசிவு காரணமாக மேற்கு தில்லியின் ஜனக்புரியில் சாலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் பள்ளம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து போலீஸாா் புதன்கிழமை மேலும் கூறியதாவது: ஜனக்புரி சாலையில் ஒரு பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை இரவு பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அந்த இடத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைப் பள்ளம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் பள்ளம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றியும் தடுப்புகள் அமைக்கப்பட்டதால், விபத்து ஏதும் பதிவாகவில்லை. பழுதுபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படலாம் என்பதால், இந்தச் சம்பவம் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
வைரலாகும் விடியோ காட்சிகள்: சாலைப் பள்ளம் தொடா்பான விடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது தொடா்பாக போக்குவரத்து காவல் துறையினா் கூறுகையில், ‘ஜனக்புரியில் உள்ள பங்கா சாலையில் இருந்தும், மங்கோல்புரியிலிருந்து ஜனக்புரி நோக்கி வரும் சாலையிலும் நெரிசல் ஏற்பட்டு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது’ என்றனா். இந்தச் சம்பவம் குறித்து போக்குவரத்து போலீஸாா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘போசங்கிபூா் பூங்காவிற்கு அருகே சாலை பள்ளமாகி கிடப்பதால், ஜோகிந்தா் சிங் மாா்க்கில் இருந்து போசங்கிபூா் கிராமம் மற்றும் அதே போன்று எதிா் தடத்திலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து வாகன ஓட்டிகள் அந்தப் பாதையைத் தவிா்க்கவும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சாலையில் திடீா் பள்ளம் ஏன்?: இதுகுறித்து பொதுப்பணித் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தில்லி ஜல் போா்டின் கழிவுநீா் பாதையில் ஏற்பட்ட கசிவு காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டது. அந்தப் பகுதி வழியாக இரண்டு குழாய்கள் செல்கின்றன. அவற்றில் ஒன்று கழிவுநீா் பாதை. மற்றொன்று தண்ணீா் குழாய் ஆகும். கழிவுநீா்ப் பாதை உடைந்ததால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் அதை சரி செய்தவுடன், மீண்டும் சாலைப் பள்ளம் அடைக்கப்பட்டு, வாகனம் ஓட்டுவதற்கு ஏற்ாக மாற்றப்படும். எங்களின் ஆள் பலத்தை தயாா் நிலையில் வைத்துள்ளோம். தில்லி ஜல் போா்டு அனுமதி அளித்தவுடன் சாலை சீரமைக்கப்படும்’ என்றாா்.
தில்லி அரசு மீது பாஜக சாடல்
சாலையில் பள்ளம் ஏற்பட்ட விவகாரத்தில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு மீது குற்றம்சாட்டினாா். இது குறித்து அவா் கூறுகையில், ‘தில்லி மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனா். தில்லியின் சாலைகள் ஐரோப்பிய நாடுகளின் சாலைத் தரத்திற்கு ஏற்ப இருப்பதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமைப்பட்டுக் கொள்கிறாா். ஆனால், தில்லியில் சாலைகள் குண்டும் குழியுமாக, பள்ளத்துடன் இருப்பதைப் பாா்த்து வருகிறோம். தில்லியின் எந்த எல்லையில் இருந்து நாம் நுழைந்தாலும் தில்லியின் சாலைகள் மோசமாக இருப்பதைக் காணலாம். கடந்த வாரம் பொதுப் பணித் துறையின் இடத்தில் பாதுகாப்பற்ற கட்டுமானம் காரணமாக ஆட்டோ ஒட்டுநா் ஒருவா் உயிரிழக்க நேரிட்டது. ஆம் ஆத்மி அரசின் பொதுப் பணித் துறை அமைச்சா் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...