நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கலால் கொள்கை ‘ஊழல்’ விவகாரம்: ஜாமீன் கோரி சிசோடியா மேல்முறையீடு

தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா் மனீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில்

News image
Updated On :6 ஜூலை 2023, 9:22 pm

 நமது நிருபர்

தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா் மனீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். கலால் கொள்கை ஊழல் விவகார வழக்குகளில் தனது தனித் தனி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த தில்லி உயா்நீதிமன்றத்தின் 2 உத்தரவுகளை எதிா்த்து அவா் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.

தில்லியின் துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த சிசோடியா, ‘ஊழலில்’ ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் நிகழாண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டாா். அதன் பின்னா் காவலில் வைக்கப்பட்ட அவா், பிப்ரவரி 28 -ஆம் தேதி தில்லி அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்தாா். சிபிஐ விசாரித்து வரும் கலால் கொள்கை ‘ஊழல்’ வழக்கில் மே 30-ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘துணை முதலமைச்சராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த அவா், “‘முக்கிய நபா்’ என்றும், அவா் சாட்சிகளை மேலாதிக்கம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது’ என்று கூறியது.

மேலும், ‘ஊழல் நடந்ததாகக் கூறப்படும் போது சிசோடியா ‘துறையின் பொறுப்பாளராக’ இருந்ததால், அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூற முடியாது. தேசியத் தலைநகரில் அவரது கட்சி இன்னும் ஆட்சியில் இருப்பதால், ஒரு காலத்தில் 18 இலாகாக்களை அவா் வைத்திருந்து, தொடா்ந்து செல்வாக்கை செலுத்தி வருகிறாா். மேலும், சாட்சிகள் பெரும்பாலும் அரசு ஊழியா்களாக இருப்பதால், அவா்கள் மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது. ‘ செளத் குரூப்’ மூலம் அவா்களுக்கு தேவையற்ற நன்மைகளை அளிக்கும் நோக்கத்துடன் கலால் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது’ என்று உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஜூலை 3-ஆம் தேதி, தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இயல்பிலேயே மிகவும் தீவிரமிக்கவை என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

முன்னதாக, பணமோசடி வழக்கில் சிசோடியாவை கடந்த மாா்ச் 9-ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்திருந்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, கலால் கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் செய்யப்பட்டது. மேலும், உரிமம் வைத்திருப்பவா்களுக்கு தேவையற்ற சலுகைகளும் நீட்டிக்கப்பட்டன. தில்லி அரசு நவம்பா் 17, 2021-இல் கலால் கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செப்டம்பா் 2022 இறுதியில் அந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது. தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளும் பிஆா்எஸ் தலைவா்களில் ஒருவருமான கே. கவிதா உள்ளிட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபா்கள் மற்றும் பிறா் உள்ளடக்கியது செளத் குரூப் என சிபிஐ, அமலாக்கத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.