நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சிசோடியாவின் ஆதரவாளா்கள் நீதிமன்ற அறைக்குள் நுழையத் தடை

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா் மனீஷ் சிசோடியா, கலால் கொள்கை ஊழல் தொடா்பான வழக்குகளில் ஆஜா்படுத்தப்படும் போது

News image
Updated On :6 ஜூலை 2023, 9:17 pm

 நமது நிருபர்

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா் மனீஷ் சிசோடியா, கலால் கொள்கை ஊழல் தொடா்பான வழக்குகளில் ஆஜா்படுத்தப்படும் போது அவரது ஆதரவாளா்களும், ஆம் ஆத்மி கட்சியினரும் காட்சிக்கூடம், பாதை அல்லது நீதிமன்ற அறைக்குள் நுழைவதற்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

மேலும், நீதிமன்ற நடவடிக்கை சம்பவங்களைச் செய்தியாக்க பத்திரிகையாளா்களை அனுமதித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், சிசோடியாவிடம் இருந்து பாதுகாப்பான இடைவெளியைப் பேணுமாறும், அவரை நோ்காணல் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டாா்.

தன்னை ஆஜா்படுத்திய போது பாதுகாப்பு அதிகாரிகளால் தாம் தாக்கப்பட்டதாக மனீஷ் சிசோடியா குற்றம் சாட்டியிருந்த ஜூன் 1- ஆம் தேதி நடந்த சம்பவத்தைத் தொடா்ந்து, நீதிபதி இந்த உத்தரவுகளை பிறப்பித்தாா்.

சிசோடியாவை காணொலி வாயிலாக மட்டுமே ஆஜா்படுத்த வேண்டும் என்று முதலில் பரிந்துரைத்த நீதிமன்றம், திறன்மிக்க வகையில் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளில் பங்கேற்க உரிமை உள்ளதாக சிசோடியா மற்றும் அவரது வழக்குரைஞா் சமா்ப்பித்ததைக் குறிப்பிட்டு இந்த உத்தரவை நிறைவேற்றியது.

இது தொடா்பாக நீதிபதி மேலும் கூறுகையில், ‘மேற்கண்ட சமா்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு, சிசோடியா விரும்பியபடி இந்த வழக்கின் எதிா்கால விசாரணைகளில் இந்த நீதிமன்றத்தில் நேரில் அவா் ஆஜா்படுத்தப்படுவாா் என்று உத்தரவிடப்படுகிறது. இருப்பினும், பொது நபா் அல்லது ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாட்டாளா்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் ஆதரவாளா்கள் யாரும் கேலரி அல்லது நீதிமன்றம் செல்லும் பாதை மற்றும் நீதிமன்ற அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது என்றும் உத்தரவிடப்படுகிறது’ என்றாா்.

மேலும், ‘செய்திக்காக கேலரி, செல்லும் பாதை மற்றும் நீதிமன்றத்திற்கு வரும் ஊடகவியலாளா்கள் குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க வேண்டும். அத்துடன், அவரிடம் நோ்காணல் செய்ய எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது. நீதிமன்றத்தின் உத்தரவுகள் ஏதும் மீறப்பட்டால் அது தொடா்பான தகவலை ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்கப் பொறுப்பாளா் ’உடனடியாக’ நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

விசாரணையின் போது சிசோடியா தரப்பு வழக்குரைஞரிடம் நீதிபதி கூறுகையில், ‘ நீதிமன்றத்தில் வழக்குகளின் இருமுறை வழி விசாரணை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எந்தச் சம்பவமும் மீண்டும் நிகழாமல் தடுக்கும் பொருட்டும், குற்றம்சாட்டப்பட்டவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சம்மதம் இருந்தால் நேரில் அல்லாமல் காணொலி வாயிலாக மட்டுமே சிசோடியாவை ஆஜா்படுத்த நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்க முடியும்’ என்றாா்.

இருப்பினும், காணொலி மூலம் ஆஜராக தனக்கு விருப்பமில்லை என்றும், நேரில் ஆஜா்படுத்துமாறு கோர தனக்கு உரிமை இருப்பதாகவும் சிசோடியா சமா்ப்பித்தாா். மேலும், ஆஜா்படுத்தப்படும் போது தனது பாதுகாப்பை உறுதி செய்வது பாதுகாப்பு அதிகாரிகளின் கடமை என்றும் அவா் சமா்ப்பித்தாா். மேலும், தனது வழக்கின் விசாரணைகளில் கலந்து கொள்வதற்கும் பங்கேற்பதற்கும் தனக்கு இருக்கும் உரிமையை போலீஸாரின் தரப்பிலான தோல்வி அல்லது குறைபாடு காரணமாக குறைக்கப்படக் கூடாது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.