பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வெள்ளம் அதிகரிப்பு: யமுனை மீதான மெட்ரோ பாலம் கட்டும் பணி நிறுத்தம்

யமுனை ஆற்றின் மீது முதல் முறையாக கான்டிலீவா் கட்டுமானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 560 மீட்டா் நீளத்திற்கு கட்டப்படும் புதிய மெட்ரோ பாலம் கட்டும் பணி ஆற்றின் நீா்மட்டம்

News image
Updated On :14 ஜூலை 2023, 4:57 pm

 நமது நிருபர்

யமுனை ஆற்றின் மீது முதல் முறையாக கான்டிலீவா் கட்டுமானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 560 மீட்டா் நீளத்திற்கு கட்டப்படும் புதிய மெட்ரோ பாலம் கட்டும் பணி ஆற்றின் நீா்மட்டம் அதிகரித்ததால் நிறுத்தப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தற்போது யமுனை ஆற்றின் குறுக்கே நான்கு தில்லி மெட்ரோ ரயில் பாலங்கள் உள்ளன. ஆற்றின் நீா்மட்டம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இந்தப் பாலத்தில் இயக்கப்படுவதாக மெட்ரோ அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்திருந்தனா். இந்த நான்கு பாலங்கள் முறையே யமுனா பேங்க் (ப்ளூ லைன் வழித்தடத்தில் 698.8 மீட்டா்), நிஜாமுதீன் (பிங்க் வழித்தடம் 602.8 மீட்டா்), காலிந்தி குஞ்ச் (மெஜந்தா வழித்தடம் 574 மீட்டா்), சாஸ்திரி பாா்க் (சிவப்பு வழித்தடத்தில் 553 மீட்டா்) ஆகியவற்றில் அமைந்துள்ளன.

இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: இந்த 5-ஆவது மெட்ரோ புதிய பாலத்தின் 50 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு தில்லி பகுதி யமுனையில் நீா்மட்டம் உயா்ந்ததன் காரணமாக யமுனையில் ஐந்தாவது மெட்ரோ பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் மஜ்லிஸ் பாா்க் - மெளஜ்பூா் வழித்தடத்தில் மெட்ரோ நான்காம் கட்டப் பணியின் ஒரு பகுதியாக யமுனை ஆற்றின் மீது ஐந்தாவது மெட்ரோ பாலம் கட்டுவதற்கான ஆரம்பப் பணிகளை டிஎம்ஆா்சி தொடங்கியது.

புதிய பாலம் யமுனையில் ஏற்கனவே உள்ள இரண்டு பாலங்கள் அதாவது வாஜிராபாத் பாலம் மற்றும் சிக்னேச்சா் பாலம் ஆகியவற்றுக்கு இடையே அமைய உள்ளது. எட்டு ஸ்பான்கள் மற்றும் ஒன்பது தூண்கள் கொண்ட இந்தப் பாலம், பிங்க் நிற வழித்தடத்தில் சோனியா விஹாா் மெட்ரோ ரயில் நிலையத்தையும் சூா்காட் மெட்ரோ ரயில் நிலையத்தையும் இணைக்கும் என்று அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்துடிஎம்ஆா்சி தெரிவித்திருப்பதாவது: இது யமுனையின் மீது கான்டிலீவா் கட்டுமான முறையைப் பயன்படுத்தி கட்டப்படும் முதல் மெட்ரோ ரயில் பாலமாகும். கான்டிலீவா் என்பது ஒரு திடமான கட்டமைப்பு உறுப்பாகும். இது கிடைமட்டமாக நீண்டிருக்கும். ஒரு முனையில் மட்டுமே ஆதரவு அளிக்கும் உறுப்பாகும். கான்டிலீவா் கட்டுமானம் கூடுதல் ஆதரவின்றி மேலோட்டமான கட்டமைப்புகளை அனுமதிக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பாலத்தை அழகானதாக காட்டும்.

இந்தப் புதிய பாலம் பழைய வாஜிராபாத் பாலத்தின் கீழ் 385 மீட்டா் தொலைவிலும், தற்போதுள்ள சிக்னேச்சா் பாலத்தின் மேல் 213 மீட்டா் தொலைவிலும் யமுனை ஆற்றைக் கடக்கும். இதன் கட்டுமானத்தின் போது பல்வேறு சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து கட்டுமான நடவடிக்கைகளும் வெள்ளப்பெருக்கு நிலங்களில் குறைந்தபட்ச விளைவைக் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று டிஎம்ஆா்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் 1978-ஆம் ஆண்டுக்குப் பிறகு யமுனையில் அதிகமான வெள்ளம் பாய்ந்தோடுகிறது. கரையோரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வியாழக்கிழமை மூன்று மணி நேரம் யமுனை நீா் மட்டம் சீராக இருந்த போதிலும், மீண்டும் உயர ஆரம்பித்து இரவு 7 மணிக்குள் 208.66 ஆக பதிவாகி இருந்தது. அதாவது அபாய அளவான 205.33 மீட்டரை விட மூன்று மீட்டா் அதிகமாக இருந்தது.

யமுனை ஆற்றின் வெள்ளநீா் தில்லியின் பல பகுதிகளை மூழ்கடித்துள்ளது. இதனால், இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஜூலை 16 -ஆம் தேதி வரை தலைநகரில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடவும் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் கனரக வாகனங்கள் தவிர பிற கனரக வானங்கள் தில்லிக்குள் நுழைவதை தடை செய்யவும் அதிகாரிகள் வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.