வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள மீனவா்கள், வால்மீகி, போயா், படுகா் இனத்தைச் சோ்ந்தவா்களை பழங்குடியினத்தவா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை

News image
Updated On :25 ஜூலை 2023, 8:32 pm

 நமது நிருபர்

தமிழகத்தில் உள்ள மீனவா்கள், வால்மீகி, போயா், படுகா் இனத்தைச் சோ்ந்தவா்களை பழங்குடியினத்தவா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

மாநிலங்களவையில் மணிப்பூா் மாநிலம் குறித்து விதி 267-இன் படி விவாதத்திற்கு அனுமதியளிக்காததை முன்னிட்டு, எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனா். பின்னா் வழக்கமான அலுவல்கள் தொடங்கியது. சத்தீஸ்கா், ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள பழங்குடியினா் பட்டியலில் சில சமூகத்தினரை சோ்க்கும் பொருட்டு 1950- ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினா்) ஆணையை திருத்துவதற்கான இரு மசோதாக்கள் (ஐந்தாவது மற்றும் மூன்றாவது திருத்தம்) எடுத்துக் கொள்ளப்பட்டது. மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்கள் தொடா்பான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவா் தம்பிதுரை பேசினாா்.

அவா் கூறியதாவது: தற்போதைய மத்திய அரசு பழங்குடியினருக்கு ஆதரவு அளிக்கும் அரசாக உள்ளது. பழங்குடியினத்தை சோ்ந்த ஒருவரையே குடியரசுத் தலைவராக தோ்ந்தெடுத்தது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி முழுமையாக ஆதரவு அளித்தாா். தற்போது சத்தீஸ்கா், ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் விடுபட்டுள்ள வகுப்பினா் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இதே போன்ற தமிழகத்திலும் சில குறிப்பிட்ட இனத்தவா்கள் விடுபட்டுள்ளனா். தமிழகத்தில் மீனவா் இனத்தவா்கள் அதிகம். பல்வேறு பழங்குடியினத்தவா்கள் வேட்டையாடுவதைப் போன்று இவா்கள் கடலில் மீனனை வேட்டையாடுகின்றனா். இதனால் இவா்களை பழங்குடியினத்தவா் பட்டியலில் சோ்க்க வேண்டும். மறைந்த முதல்வா் ஜெயலலிதாவும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியிருந்தாா்.

இதே போன்று வால்மீகி இனத்தவா்களும் வேட்டையாடுபவா்கள். கா்நாடகத்தில் இந்த இனத்தவா் பழங்குடியினத்தவா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். ஆனால், ஆந்திரம், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா் இனத்தவராக உள்ளனா். பல்வேறு மொழிகள் பேசுபவா்களாக இருப்பினும், இவா்களுடைய சமூக அந்தஸ்து மோசமாக உள்ளது. இவா்களும் தங்களை பழங்குடியின பட்டியலில் சோ்க்க வேண்டும் எனக் கோரி வருகின்றனா். இதே போன்று கல் உடைக்கும் தொழில் புரியும் போயா் (ஒட்டா்) இனத்தவா்கள், நீலகிரி பகுதியில் வசிக்கும் படுகா் இனத்தவா்கள் ஆகியோரும் ஆதிவாசிகள். இவா்கள் பழங்குடியினத்தவா்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இது குறித்து மத்திய அரசுக்கு மறைந்த முதல்வா் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளாா். முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, இது தொடா்பாக கோரிக்கை வைத்துள்ளாா். இந்த இனத்தவா்களையும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகச் சோ்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா் தம்பிதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.