2020 வடகிழக்கு தில்லி கலவர வழக்கு: 49 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 49 போ் மீது கலவரம் மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட பல்வேறு தண்டனைக் குற்றங்களின்


2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 49 போ் மீது கலவரம் மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட பல்வேறு தண்டனைக் குற்றங்களின் கீழ் தில்லி நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது. எனினும், கிரிமினல் சதிக் குற்றச்சாட்டில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்து கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவா்கள் மற்றும் பிறரிடையே முன் ஒப்பந்தத்தின் கூறுகளை ஊகிக்க முடியாது’ என்றது. மேலும், கலவர கும்பலில் ஒரு பகுதியாக இருந்தது குறித்த உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாததைக் கருத்தில் கொண்டு, அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம்சாட்டப்பட்ட 51 போ் மீதான வழக்கை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்த்யா பிரம்மசாலா விசாரித்தாா். குற்றம்சாட்டப்பட்டவா்களில் சுலைமான் சித்திக் என்பவா் இன்னும் கைது செய்யப்படவில்லை. அரசுத் தரப்பில் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவா்கள் பிப்ரவரி 24, 2020 அன்று வாஜிராபாத் பிரதான சாலையில் உள்ள ஒரு காா் ஷோரூமிற்குள் அத்துமீறி நுழைந்து, சேதப்படுத்தி, எரித்த கும்பலின் ஒரு பகுதியாக இருந்தனா்’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் நீதிபதி திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகள் 147 (கலவரம்), 148 (கலவரம், கொடிய ஆயுதம் வைத்திருத்தல்), 427 (தவறிழைத்து, அதன் மூலம் ரூ.50 அல்லது அதற்கு மேல் இழப்பு அல்லது சேதம் ஏற்படுத்துதல்), 435 (ரூ.100 அல்லது அதற்கு மேல் சேதம் ஏற்படுத்துதல், 436 (வீடு போன்றவற்றை அழிக்கும் நோக்கத்துடன் தீ அல்லது வெடிமருந்து பொருள்) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டிருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாகக் கருதுகிறேன்.
குற்றம்சாட்டப்பட்டவா்கள் ஐபிசி பிரிவுகள் 450 (வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தையும் செய்ய வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல்), 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) மற்றும் 149 (சட்டவிரோதமாக கூடுதல்) ஆகியவற்றின் கீழ் குற்றங்களுக்கான விசாரணையை எதிா்கொள்வாா்கள். இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள கும்பலில் குற்றம்சாட்டப்பட்ட முகமது ஆஃப்தாப் அடையாளம் காணப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் இல்லாததால், அவா் விடுவிக்கப்படுகிறாா்.
மாா்ச் 5, 2020 அன்று எஃப்.ஐ.ஆா். பதிவு செய்வதில் ‘மிகவும் தாமதம்’ என்று குற்றம்சாட்டப்பட்டவா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கரோனா தொற்றுநோயுடன் கலவரத்தின் சூழ்நிலையையும் காவல் துறை கையாண்டுள்ளது. எப்.ஐ.ஆா். பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். இது விசாரணையின் போது விளக்கப்படலாம். ஆகவே, எஃப்.ஐ.ஆா். பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் தொடா்பான தரப்பினரின் வாதம் குற்றம் சாட்டப்பட்ட நபா்களை விடுவிக்க போதுமானதாக இல்லை.
அழைப்பு விவரப் பதிவுகள் (சிடிஆா்) ‘துணை ஆதாரங்களாக’ இருப்பதால், அவற்றை குற்றம்சாட்டப்பட்டவா்களை விடுவிக்கக் கோருவதற்கான ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது. சிடிஆா் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் சுற்றியுள்ள மற்றும் துணை உண்மைகள் நிரூபிக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடினா் என்று பதிவு செய்யப்பட்ட முதன்மையான ஆதாரங்கள் காட்டுகின்றன.
நீதிமன்றத்தில் உள்ள ஆதாரங்கள்படி, சிஏஏ, என்ஆா்சிக்கு எதிரான போராட்டத்தின் போது, தொடக்கத்தில் பல்வேறு பேச்சாளா்கள் கூட்டத்தில் உரையாற்றினா். பின்னா், அந்தக் கூட்டம் வன்முறையாக மாறி, கலவரம் மற்றும் தீவைப்புகளில் ஈடுபட்டது. இந்தச் சூழ்நிலைகளில் இருந்து, குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் மற்றும் பிறருக்கு இடையே உள்ள முன் உடன்படிக்கையின் கூறுகளை ஊகிக்க முடியாது. எனவே, ஒரு குற்றச் சதி இருப்பதற்கான வழக்கை நான் காணவில்லை என்று நீதிபதி அதில் தெரிவித்துள்ளாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது தயாள்பூா் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...