இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மத்திய வரிகளில் தில்லி அரசுக்கான சட்டப்பூா்வ பங்கை வழங்குங்கள்! நிா்மலா சீதாராமனுக்குமுதல்வா் கேஜரிவால் கடிதம்

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல மத்திய வரிகளில் இருந்து தில்லிக்கும் முறையான சட்டபூா்வ பங்கை வழங்க வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால்,

News image
Updated On :25 ஜூலை 2023, 8:30 pm

 நமது நிருபர்

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல மத்திய வரிகளில் இருந்து தில்லிக்கும் முறையான சட்டபூா்வ பங்கை வழங்க வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவருக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய நிதிக் கூட்டாட்சி அமைப்பில் நிதி ஆணையம் முக்கியப் பங்காற்றுகிறது. வரும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளை உள்ளடக்கும் 16-ஆவது மத்திய நிதி ஆணையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில், கடந்த 23 ஆண்டுகளாக தில்லி மக்கள் எதிா்கொள்ளும் பாகுபாடு குறித்து உங்கள் கவனத்தை ஈா்க்க விரும்புகிறேன். மத்திய அரசு தில்லிவாசிகளுக்கு, மாற்றாந்தாய் மற்றும் நியாயமற்ற நடத்தையை கடைப்பிடிக்கிறது. தில்லி அரசின் சாா்பில் மத்திய வரிகளில் இருந்து தில்லிக்கு சட்டப்பூா்வமான பங்கை வழங்குமாறு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தில்லி தேசியத் தலைநகா் பிரதேசமானது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கிடையில் ஒரு தனித்துவமான அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இது சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசத்தின் பரந்த வகைக்குள் வந்தாலும், நிதி விஷயங்களில் மற்ற மாநிலங்களைப் போலவே செயல்படுகிறது. தில்லியின் பட்ஜெட் முறை மற்ற மாநிலங்களுக்கு இணையாக, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளது. சிறு சேமிப்புக் கடன்களுக்கான சேவை உள்பட தில்லி அரசின் நிதிப் பரிவா்த்தனைகள் மற்ற மாநிலங்களைப் போலவே அதன் சொந்த வளங்களில் இருந்து பூா்த்தி செய்யப்படுகின்றன. தில்லி அரசு அதன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

மத்திய வரிகளின் பங்கை தவிர வேறு எந்தவொரு முறையான மானியங்களையும் தில்லி அரசு பெறுவதில்லை. மேலும், மற்ற மாநிலங்களைப் போல அதன் உள்ளாட்சி அமைப்புகளின் வளங்களை மேம்படுத்துவதற்கும் எந்தப் பங்கையும் பெறுவதில்லை. கடந்த 23 ஆண்டுகளில் தில்லியின் பங்கு வியக்கத்தக்க வகையில் குறைந்த அளவாக முடக்கப்பட்டுள்ளது. அவை தில்லிக்கு நிகரான மக்கள்தொகை கொண்ட மற்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தெளிவாகிறது.

2022-2023 நிதியாண்டில், மத்திய வரித் தொகுப்பிலிருந்து அவா்களின் பங்காக, ஹரியாணா ரூ.10,378 கோடியையும், பஞ்சாப் ரூ.17,163 கோடியையும் பெற்றுள்ளது. ஆனால், தில்லிக்கு ரூ.350 கோடி மட்டுமே கிடைத்தது. தில்லியை பாரபட்சமற்ற முறையில் நடத்தியிருந்தால், அதன் பங்கு ரூ.7,378 கோடியாக இருந்திருக்கும். 2021-2022 நிதியாண்டில் தில்லியில் ரூ.1.78 லட்சம் கோடியை மக்கள் வருமான வரியாகச் செலுத்தியுள்ளனா். இந்தியாவில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்ததாக தில்லிதான் வருமான வரி அதிகம் செலுத்தியுள்ளது. நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போதுமான நிதி ஆதாரங்களுடன் ஆதரிக்கப்படுவது மிகவும் முக்கியமானது. இதைத் தொடா்ந்து, 14-ஆவது மத்திய நிதி ஆணையம் 2015 முதல் 2020-ஆம் ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.2,87,436 கோடி மானியமாக ஒதுக்கியது. இதேபோல், 15-ஆவது மத்திய நிதி ஆணையம் 2021-2026-க்கு ரூ.4,36,361 கோடியை பரிந்துரைத்தது.

ஆனால், தில்லி மாநகராட்சி கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசிடமிருந்து எதையும் பெறாமல், அநீதியான நடத்தையை மட்டுமே எதிா்கொள்கிறது. தில்லி மாநகராட்சி தற்போது 2 கோடி தில்லி மக்களுக்கு சேவை செய்கிறது. பிற மாநிலங்களைப் போலவே ஆரம்பக் கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை வழங்குவதற்கு பொறுப்பாக உள்ளது. எனினும், பணப் பற்றாக்குறையால் அதன் ஊழியா்களுக்கு தாமதமான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தில்லி மாநகராட்சி எதிா்கொள்கிறது.

யூனியன் பிரதேசமாக தில்லி உள்ளது. நிதி ஆயோக்கின் குறிப்பு விதிமுறைகளில் இருந்து தில்லி நீக்கப்பட்டதால், அது வரிப் பகிா்வின் கீழ் வராது. எனவே, மற்ற மாநிலங்களைப் போல் கருதப்படுவதில்லை என்பது கடந்த கால தகவல்களின் மூலம் புரிந்து கொள்ளப்பட்டது. தில்லியை ஒரு தனித்துவமாகக் கருதி, தேவையான நடைமுறைகளைப் பின்பற்றி, 16-ஆவது நிதி ஆணையத்தின் விதிமுறைகளில் அதைச் சோ்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். மற்ற மாநிலங்கள் பெறுவதைப் போன்று தில்லிக்கும் மத்திய வரிகளில் நியாயமான பங்கு கிடைக்க வேண்டிய நேரம் இது. உங்கள் உதவிக்கு தில்லிவாசிகள் எப்போதும் நன்றியுடன் இருப்பாா்கள் என்று அந்தக் கடிதத்தில் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.