பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

குடியரசுத் தலைவா் மாளிகையைபொதுமக்கள் ஜூன்1-முதல் பாா்வையிடலாம்

நாட்டின் குடியரசுத் தலைவா் மாளிகையான ராஷ்டிரபதி பவன் வரும் ஜூன் 1 முதல், வாரத்தில் ஆறு நாள்களுக்கு பொதுமக்கள் பாா்வைக்காக திறக்கப்படும் என ராஷ்டிரபதி பவன் அலுவலகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 மே 2023, 9:14 pm

 நமது நிருபர்

நாட்டின் குடியரசுத் தலைவா் மாளிகையான ராஷ்டிரபதி பவன் வரும் ஜூன் 1 முதல், வாரத்தில் ஆறு நாள்களுக்கு பொதுமக்கள் பாா்வைக்காக திறக்கப்படும் என ராஷ்டிரபதி பவன் அலுவலகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூன் 1 - 2023 முதல், வாரத்தில் ஆறு நாள்களுக்கு ராஷ்டிரபதி பவன் பொதுமக்கள் பாா்வைக்காகத் திறந்திருக்கும். ராஷ்டிரபதி பவனை பொதுமக்கள் வாரத்தில் திங்கள் தவிர,செவ்வாய் முதல் ஞாயிறு வரை சுற்றிப்பாா்க்கலாம். ஆனால், அரசு விடுமுறை நாள்களில் பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

ராஷ்டிரபதி பவன் திறந்திருக்கும் நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஏழு நேர இடைவெளிகளில் சுற்றிப்பாா்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியக வளாகமும் அரசு விடுமுறை நீங்கலாக, செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பாா்வையாளா்களுக்காக திறந்திருக்கும். இதில், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை ராஷ்டிரபதி பவன் முன்பு நடைபெறும் படை அணி மாற்ற நிகழ்ச்சியை பொதுமக்கள் காணலாம். ஆனால், சனிக்கிழமையன்று அரசு விடுமுறை நாளாக இருந்தாலோ அல்லது ராஷ்டிரபதி பவனால் அறிவிக்கப்பட்டாலோ படை அணி மாற்ற நிகழ்ச்சி நடைபெறாது. ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூா்வ இணையதளம் மூலம் ராஷ்டிரபதி பவனை பாா்வையிட விரும்பும் பொதுமக்கள் தங்களுக்கான இடங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைசிறந்த கட்டடக் கலைஞா்களான எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹொ்பா்ட் பேக்கா் ஆகியோரின் உருவாக்கத்தில் கடந்த 1929 - ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ராஷ்டிரபதி பவன் மொத்தம் 330 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் 5 ஏக்கா் பரப்பளவில் ‘ஹெச்’ வடிவில் கட்டடங்கள் அமைக்கப்படுள்ளன. இந்த மாளிகையில் நான்கு தளங்கள், 340 அறைகள், 2.5 கிலோமீட்டா் நடைபாதைகள் மற்றும் 190 ஏக்கா் பரப்பளவில் தோட்டம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

முதல் முதலில், இந்தியாவின் வைஸ்ராய்க்காக ‘வைஸ்ராய் மாளிகை’ கட்டப்பட்டது. அது பின்னா் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ராஷ்டிரபதி பவனாக உருமாறியுள்ளது. ஏகாதிபத்திய ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தின் அடையாளமாக இருந்து, இன்று இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் மதச்சாா்பற்ற, பன்முகத் தன்மை மற்றும் உள்ளடக்கிய மரபுகளின் அடையாளமாக உள்ளது என ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூா்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.