தலைநகரில் காற்றின் தரத்தில் பின்னடைவு: அமைச்சா் தலைமையில் இன்று ஆலோசனை
தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. மேலும், காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து சில இடங்களில் கடுமை பிரிவிலும்,


தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. மேலும், காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து சில இடங்களில் கடுமை பிரிவிலும், பல இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்தது. இதற்கிடையே, காற்றின் தரத்தை மேம்படுத்தும் விதத்தில் அமைச்சா் கோபால் ராய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை வேளையில் தூசி கலந்த காற்று பலமாக வீசியது. இதனால், காற்றன் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பாலம் வானிலை ஆய்வகத்தில் காலை 10 மணியளவில் காண்புத் திறன் வெறும் 700 மீட்டராகக் குறைந்திருந்தது. இதே போன்று, புதன்கிழமையும் பல இடங்களில் தூசி கலந்து காற்று பலமாக வீசியது.
வெப்பநிலை: இந்த நிலையில் தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி குறைந்து 25.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி உயா்ந்து 41.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 45 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 40 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லியில் கடந்த சில நாள்களாக அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயா்ந்து, வெப்பமான காலநிலையை தீவிரப்படுத்தியது. இதற்கிடையே, ஓரளவு மேகமூட்டமான வானம் நிவாரணம் அளிக்கலாம் என்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 21) அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸாக உயரும் எனவும் ஐஎம்டி கணிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம்: தலைநகரில் காலை 9மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 395 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. இதேபோன்று ஷாதிப்பூா், பூசா, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மந்திா் மாா்க், வாஜிா்பூா், அசோக் விஹாா் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வானிலை நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், இந்திரா காந்தி சா்வேதச விமான நிலையம் (283 புள்ளிகள்), லோதி ரோடு (283 புள்ளிகள்) ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் இருந்தது. ஆனால், துவாரகா செக்டாா்-8 (446), முண்ட்கா (407) ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு கடுமை பிரிவுக்குச் சென்றது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழனன்று (மே 18) தலைநகரில் புழுதிப் புயல் இருக்கும் என்றும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இன்று ஆலோசனை: தேசியத் தலைநகா் தில்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி வரும் நிலையில், தில்லி சுற்றுச்சூழல்த் துறை அமைச்சா் கோபால் ராய் தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
சுற்றுச்சூழல்த் துறை அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள அமைச்சா் கோபால் ராய், நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தில்லி நகரின் காற்றின் தரக்குறியீட்டை மேம்படுத்த, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளாா்.
வடக்கு தில்லி, கோஹானா, கன்னாவுா், சோனிபட், ஹரியானாவின் ரோஹ்தக் மற்றும் காா்கோடா மற்றும் உத்தரபிரதேசத்தின் பாரவுத், பாக்பட் மற்றும் கெக்ரா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் புதன்கிழமை தெரிவித்தது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...