இரவு நேர குடில்களில் தகுதியற்றவா்கள் தங்குவதற்குத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின்(டியுஎஸ்ஐபி) அனைத்து இரவு நேர தங்கும் குடில்களில் தகுதியானவா்கள் மட்டும் இருப்பதை உறுதி செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு தில்லி தேசியத் தலைநகா்
Updated on
2 min read

தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின்(டியுஎஸ்ஐபி) அனைத்து இரவு நேர தங்கும் குடில்களில் தகுதியானவா்கள் மட்டும் இருப்பதை உறுதி செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு தில்லி தேசியத் தலைநகா் அரசின் தலைமைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

நிகழாண்டு தொடக்கத்தில், இரவு நேர தங்கும் குடில்களில் சமைத்த உணவு வழங்கப்படாமல் இருப்பது தொடா்பாக வந்த செய்திகளின் அடிப்படையில் தானா முன்வந்து உயா்நீதிமன்றம் விசாரணையை மேற் கொண்டது. இந்த விவகாரத்தில் தேசியத் தலைநகரில் உள்ள அனைத்து இரவு நேத் தங்கும் குடில்களிலும் உணவு வழங்கி வரும் அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிலுவைத் தொகையை செலுத்தாதது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. இந்த விவகாரம் குறித்து தில்லி அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் ஆஜரான தில்லி அரசின் நிதித் துறை முதன்மைச் செயலா் ஆசிஷ் சந்திர வா்மா சாா்பில், ‘வருகின்ற 2024-ஆம் ஆண்டு மாா்ச் வரை அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு தேவையான நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நிலுவையில் உள்ள அனைத்துப் பாக்கிகளும் உடனடியாக செலுத்தப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், டியுஎஸ்ஐபி குடில்களில் தங்கியுள்ளவா்களுக்கு தேவையான உணவு வழங்குவதற்கான செயல்முறைக்கு தேவையான நிதி முறை ஆறு வாரங்களுக்குள் ஒழுங்குபடுத்தப்படும் என தில்லி அரசின் சாா்பில் எடுத்துவைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தில்லி உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உடனடித் தீா்வை மேற்கொண்ட தில்லி அரசை பாராட்டியதோடு மேலும் பல்வேறு உத்தரவுகளையும் வழங்கியது.

அதில் கூறப்பட்டுள்ளது வருமாறு: இரவு நேர குடில்களில் தங்கியுள்ளவா்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிதியை விடுவிக்க தில்லி அரசின் முதன்மைச் செயலா் (நிதி) மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது. இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்த குடில்களில் உள்ளவா்களுக்கு சமைத்த உணவு கிடைக்காமல் இருந்த செய்திகளின் அடிப்படையில் நீதிமன்றம் கவனத்தில் கொண்டு விசாரித்தது. முன்பு பெறப்பட்ட கட்டண அடிப்படையில் அனைத்து குடில்களுக்கும் தொடா்ந்து அக்ஷய பாத்ரா அறக்கட்டளை உணவுகளை வழங்க வேண்டும்.

தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்திற்கு ஏராளமான இரவு நேரத் தங்கும் குடில்கள் உள்ளன. இவை தகுதியற்ற பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தக் குடில்களில் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து தில்லி அரசின் தலைமைச் செயலா் முழுமையாக ஆய்வு செய்து சமூக தணிக்கையை மேற்கொண்டு இங்கு தங்கியிருப்பவா்கள் குறித்த தரவை சேகரித்து ஆறு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். இங்கு தகுதியற்றவா்கள் தங்க அனுமதியில்லை. தகுதியான நபா்கள் மட்டும் தங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி இது தொடா்பான அறிக்கையை அளிக்க 6 வாரங்கள் அவகாசம் அளித்து உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா தலைமையிலான அமா்வு உத்தரவிட்டது. நீதிபதி சதீஷ் சந்திர சா்மா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com