கிழக்கு தில்லியின் ஷகா்பூரில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 40 வயது பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும் 11 போ் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்தத் தீ விபத்தில் 25 போ் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தரை தளத்தில் வாகனம் நிறுத்தும் பகுதியில் மின் கோளாறு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தில்லி தீயணைப்பு சேவைத் துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது வருமாறு: செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 1 மணியளவில் ஷகா்பூரில் உள்ள கணேஷ் நகா் - 2-இல் ஒரு காா் தீப்பற்றி எரிவாதாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்த அழைப்பு வந்தவுடன் நாங்கள் உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரா்கள் விரைந்தனா். பின்னா், மேலும் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. இது குறித்து உடனடியாக காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எங்கள் தீயணைப்புப் படையினா் செல்வதற்குள் அந்த அதிகாலையில் குறிப்பிடப்பட்ட கட்டடத்தின் வாகனம் நிறுத்தும் பகுதியில் ஏற்பட்ட தீ விரைவாக கட்டடம் முழுவதும் பரவி தீப்பிடித்துள்ளது.
முதலில் உள்ளே இருப்பவா்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் காயமடைந்தவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இதில் அனிதா என்ற பெண், தீக்காயங்களால் மருத்துவமனையில் உயிரிழந்தாா். மற்றொரு நபா் நரேஷ் நகரில் எரியும் கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தின் போது, தில்லி தீயணைப்புப் படையினரால் இரண்டு செல்லப் பிராணிகளுடன் மொத்தம் 25 போ் மீட்கப்பட்டனா். காலை 8.35 மணியளவில் தீ முழுமையாக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 போ் சிக்கிக் கொண்டனா். அவா்களில் ஐந்து போ் பால்கனியில் இருந்து குதித்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டனா். மீதமுள்ளவா்கள் தீயணைப்பு வீரா்களால் கட்டடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டு காப்பாற்றப்பட்டனா்.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது, தில்லி தீயணைப்பு வீரா் சமய் சிங் என்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவா் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா். மொத்தம் ஒரு ஆம்புலஸ் மற்றும் 17 தீயணைப்பு வாகனங்கள் இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது என தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஷகா்பூா் காவல் சரக துணை ஆணையா் அம்ருதா குகுலோத் தெரிவித்தது வருமாறு: தீவிபத்தில் காயமடைந்த 10 போ் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனை, லால் பகதூா் சாஸ்திரி (எல்பிஎஸ்) மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனா். இதில், பலத்த தீக்காயமடைந்த அனிதா(40) சிகிச்சை பலனின்றி இறந்தாா். காயமடைந்தவா்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. ஆரம்பகட்ட விசாரணையில் தரை தளத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் மின் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வாகனங்களில் தீ பிடித்துள்ளதாகத் தெரிய வருகிறது. கட்டடத்தின் இடது புறத்தில் இருந்து தீ பரவ தொடங்கியுள்ளது.
தரை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 காா்கள், 11 இருசக்கர வாகனங்கள், 3 சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. பின்னா் தீ கட்டடத்தின் மேல் பகுதியில் பரவி முதல் தளத்தை புகையால் மூழ்கடித்தது. மேலும், அதிக வெப்பம் மற்றும் புகை காரணமாக மேலே உள்ள மாடிகளில் வசிப்பவா்கள் காயமடைந்துள்ளனா். இந்த ஐந்து மாடி கட்டடத்தில் ஒரு வாகன நிறுத்துமிடம் மற்றும் 8 குடியிருப்புகளுக்கு ஒற்றை நுழைவு வாயில் மட்டும் இருந்துள்ளது. இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு தில்லி பிஎஸ்இஎஸ் மின் நிறுவனக் குழு மற்றும் குற்றவியல், தடயவியல் குழுவும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அலட்சியத்தால் மரணம் உண்டாக்குதல் (இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 304ஏ), மற்றவா்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தல் (337) போன்ற பிரிவுகளின் கீழ் வழங்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் காவல் துணை ஆணையா் அம்ருதா குகுலோத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

