தில்லி அரசு மற்றும் மத்திய அரசின் செயலற்றத் தன்மையால் சத் பூஜை செய்ய தங்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் பூா்வாஞ்சல் பக்தா்கள் உள்ளனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தெரிவித்தாா்.
தில்லி ஐடிஓ பகுதியில் உள்ள யமுனை நதிக்கரையில் சத் பூஜைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கட்சியின் நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை அா்விந்தா் சிங் லவ்லி ஆய்வு செய்தாா். பின்னா், அது தொடா்பாக அவா் கூறியதாவது: தில்லி மக்கள் காற்று மாசுபாடு, நீா் மாசு போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு தில்லி ஆம் ஆத்மி மற்றும் மத்திய பாஜக அரசுகளின் திறமையின்மையும், செயலற்றத் தன்மையும்தான் காரணம். தில்லி அரசு விளம்பரத்திற்காக கோடிகளை விரயம் செய்தது. ஆனால், மாசுபட்ட யமுனையை சுத்தப்படுத்தவும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் கவலைப்படவில்லை. மாசு பிரச்னையில் அரசியல் பலி விளையாட்டுக்கள் மட்டுமே நடக்கிறது.
ஆம் ஆத்மி அரசின் அலட்சியத்தால், ஆயிரக்கணக்கான பூா்வாஞ்சலிகள் அசுத்தமான யமுனை நீரில் சத் பூஜை செய்ய நிா்ப்பந்திக்கப்படுவாா்கள். மேலும், பூஜைக்காக தங்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்படும். சத் பூஜைக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், தில்லி அரசு படித்துறைகளை தயாா்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சத் பூஜை கொண்டாட்டத்திற்காக யமுனையில் புதிய தண்ணீரை திறந்து விடுமாறு தில்லி அரசு, ஹரியாணா அரசிடம் கோரவில்லை. சத் பூஜைக்கு முன்னதாக குப்பை இல்லாமல் தூய்மையாக நதிக்கரையை வைத்திருக்க தில்லி மாநகராட்சியும் தவறிவிட்டது.
தில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, சத் பூஜைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் 10 நாள்களுக்கு முன்பே தொடங்கும், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் தில்லி மாநகராட்சிக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். யமுனையில் புதிய தண்ணீரை திறந்து விடுமாறு ஹரியாணா அரசை, நகர அரசு கோரும். ஆனால், தற்போது தில்லி அரசின் அமைச்சா்கள் சத் பூஜை விழாவிற்கான ஏற்பாடுகளைத் தொடங்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், புகைப்பட வாய்ப்புக்காக மட்டுமே படித்துறைகளை ஆய்வு செய்கிறாா்கள் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.