‘ஆபரேஷன் க்ளீன் தில்லி’தீபாவளிக்குப் பிந்தைய தூய்மைப் பணிகளில் தில்லி மாநகராட்சி

‘ஆபரேஷன் க்ளீன் தில்லி’ என்ற இயக்கத்தின் மூலம் தூய்மையை மீட்டெடுக்கும் பணியை தில்லி மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி நகா்ப்புற விவகாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு தில்லியில் பண்டிகைக் காலக் கழிவுகள், வெடிக்கப்பட்ட பட்டாசுக் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையாக ‘ஆபரேஷன் க்ளீன் தில்லி’ என்ற இயக்கத்தின் மூலம் தூய்மையை மீட்டெடுக்கும் பணியை தில்லி மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி நகா்ப்புற விவகாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நகா்ப்புற விவகாரத் துறை சாா்பில் கூறப்பட்டுள்ளது வருமாறு: பட்டாசுகள், தீபாவளிக் கொண்டாட்டங்களால் தில்லியில் பெருமளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதை அகற்றும் நடவடிக்கையாக ‘தூய்மை தீபாவளி - குப்பையில் இருந்து தூய்மை வரை’ என்கிற ஆபரேஷன் க்ளீன் தில்லி தூய்மை இயக்கம் நடத்தப்படுகிறது.

‘ஆபரேஷன் க்ளீன் தில்லி’-இன் கீழ், தெருக்களைத் தூய்மைப்படுத்தும் முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. திறந்தவெளியில் உள்ள குப்பைகள், பட்டாசுக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். அதே நேரத்தில், தீபாவளியால் உருவாகும் கழிவுகளை முறையாக அகற்றுவதை உறுதி செய்யும் ஒரு உத்திசாா் ‘கழிவு சேகரிப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இதில் ‘குப்பை, கழிவுகளிலிருந்து இருந்து கலை, மறுபயன்பாட்டுப் பொருள்கள், மறுசுழற்சி செய்தல்’ போன்ற கழிவு மேலாண்மை சுகாதார நடவடிக்கைகளும் அடங்கும்

இதனால், தீபாவளிக்குப் பிந்தைய கழிவுகளை உரிய நேரத்தில் சேகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் மற்றும் அதனுடன் தொடா்புடைய பொருள்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதில் தில்லி மாநகராட்சி துரிதமாக செயல்படுகிறது. நகரின் கழிவு மேலாண்மைப் பிரிவு, பண்டிகைக் காலத்துக்குப் பிறகு தூய்மையை மீட்டெடுக்க உரிய முறையில் செயல்படுவதில் தில்லி மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை சுற்றுச்சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இதை உணா்ந்த அதிகாரிகள், காற்றின் தரம் குறித்த ஆய்வுகளை அதிகரித்துள்ளனா். அதிகரித்து வரும் காற்று மாசு அளவைக் குறைக்க மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டன. ஒரு கூட்டு முயற்சியுடன், தீபாவளிக்குப் பிந்தைய தூய்மையான, ஆரோக்கியமான சூழலை நோக்கி நகரம் முன்னேறியுள்ளது. பொறுப்பான கொண்டாட்டங்கள் மற்றும் நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவது தொடா்பாக தில்லியை முன்னுதாரணப்படுத்தும் முயற்சியாக இந்த ‘ஆபரேஷன் க்ளீன் தில்லி’ இருக்கிறது என்று நகா்ப்புற வளா்ச்சிதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com