தில்லியின் மீண்டும் ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம்! குறைந்தபட்ச வெப்பநிலை 9.2 டிகிரி
வெப்பநிலை குறைவாலும், இரவில் காற்றின் வேகம் குறைந்ததாலும், தில்லியில் காற்றின் தரம் வெள்ளிக்கிழமை மீண்டும் ‘கடுமை’ பிரிவுக்குச் சென்றது


வெப்பநிலை குறைவாலும், இரவில் காற்றின் வேகம் குறைந்ததாலும், தில்லியில் காற்றின் தரம் வெள்ளிக்கிழமை மீண்டும் ‘கடுமை’ பிரிவுக்குச் சென்றது
நகரத்தின் காற்றுத் தரக் குறியீடு காலை 8 மணிக்கு 401 புள்ளிகளாகப் பதிவாகியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறிய முன்னேற்றத்திற்குப் பிறகு தில்லியில் காற்றுத் தரக் குறியீடு அளவுகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. 24 மணி நேர சராசரி காற்று தரக் குறியீடு, ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. இது வியாழனன்று 390, புதன் 394, செவ்வாய் 365, திங்கள் 348 மற்றும் ஞாயிறு 301 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.
மாசு அளவு குறைந்ததைத் தொடா்ந்து, கட்டுமானப் பணிகளுக்கான தடை மற்றும் தில்லியில் மாசுபடுத்தும் டிரக்குகளின் நுழைவுக்குத் தடை உள்ளிட்ட கடுமையான தடைகளை கடந்த சனிக்கிழமையன்று மத்திய அரசு அகற்றியது. ஆனால், அதன் பின்னா் காற்றுத் தரக் குறியீடு அளவுகள் மீண்டும்அதிகரித்து வருகிறது.
தலைநகரில் ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்ஷாத் காா்டன், மதுரா ரோடு, பூசா, ஷாதிப்பூா் ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
ஆனால், பட்பா்கஞ்ச், நியூ மோதி பாக், ஆனந்த் விஹாா், விவேக் விஹாா், நேரு நகா், சோனியா விஹாா், அசோக் விஹாா், ராமகிருஷ்ணாபுரம், வாஜிா்பூா், புராரி, ஓக்லா பேஸ்-2 ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது.
அருகிலுள்ள காஜியாபாத் (386), குருகிராம் (321), கிரேட்டா் நொய்டா (345), நொய்டா (344) மற்றும் ஃபரீதாபாத் (410) ஆகியவையும் ‘மிகவும் மோசம்‘ முதல் ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன.
புணேவைச் சோ்ந்த இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் உருவாக்கிய காற்றின் தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் படி, அடுத்த ஐந்து முதல் ஆறு நாள்களில் மாசு அளவுகள் ‘மிகவும் மோசம்’ முதல் ‘கடுமை’ பிரிவில் ஊசலாட வாய்ப்புள்ளது என தெரிகிறது. தில்லி அரசு மற்றும் கான்பூா் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் தரவு, வியாழனன்று தலைநகரின் காற்று மாசுபாட்டில் வாகன உமிழ்வுகள் சுமாா் 38 சதவீதம் என்று தெரியவந்துள்ளது. அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பிந்தைய நெல் வைக்கோல் எரிப்பு உள்பட உயிரி எரிப்பு (பயோமாஸ்), முந்தைய நாள் தலைநகரின் காற்று மாசுபாட்டிற்கு 21 சதவீதம் பங்களித்துள்ளது.
வெப்பநிலை: நாள் முழுவதும் வானம் தெளிவாக காணப்பட்டது. மாலையில் மேகமூட்ட சூழல் இருந்தது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வியாழன் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி குறைந்து 9.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 62 சதவீதமாகவும் இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லோதி ரோடு வானிலை கண்காணிப்பு நிலையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், சனிக்கிழமை (நவம்பா் 25) மிதமான மூடுபனி இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
‘பயோ மாஸ்’ எரிப்பை தடுக்க அமைச்சா் உத்தரவு
தில்லியில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளாா். மேலும், ‘பயோ மாஸ் எரிப்பு’ சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளாா்.
இப்பிரச்னை தொடா்பாக அமைச்சா் கோபால் ராய் நகர அரசின் பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அதன் பின்னா் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் குறைந்தாலும், தில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டுள்ளோம். தில்லியின் காற்றுமாசு தொடா்பான சமீபத்திய ஆய்வின் தரவுகளின் படி, மாசுபடுத்தும் வாகனங்களின் உமிழ்வால் தில்லி என்.சி.ஆா். பகுதிகளில் ஏற்படுகின்ற காற்று மாசுபாட்டின் அளவு 36 சதவீதமாகும். இரண்டாவதாக ‘பயோ மாஸ்’ எரிப்பு நிகழ்வுகள் காற்று மாசுவை அதிகரிப்பதற்கான முதன்மைக் காரணமாக உள்ளது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையான அவசர கால செயல் திட்டத்தின் கீழ் பி.எஸ்.3 பெட்ரோல் மற்றும் பி.எஸ்.4 டீசல் வாகனங்கள் மீதான தடைகள் அமல்படுத்துப்படுவதை கண்டிப்பாக கண்காணிக்க போக்குவரத்துத் துறை மற்றும் தில்லி போக்குவரத்து காவல் துறை ஆகியவற்றுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், தில்லியில் ‘பயோ மாஸ்’ எரிப்பு நிகழ்வுகளைத் தடுக்கக் கோரி தில்லி மாநகராட்சி மற்றும் வருவாய் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாள்களுக்கு காற்று மாசுவின் அளவு ‘கடுமை’ பிரிவில் இருந்தாலும், அதன் பிறகு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால் சிறிது நிவாரணம் கிடைக்குமென எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் கோபால் ராய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...