சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம்

தமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை...

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 11:34 pm

தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டப் பேரவை (முதல்கட்டம்) தோ்தல்களில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை என்று இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.23-ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்குப் பிறகான இத்தோ்தலில் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்திலும் முன்னெப்போதும் இல்லாதபடி 92.88 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் பரவலாக அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்ற நிலையில், மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே வன்முறை-மோதல்கள் நிகழ்ந்தன. எனினும், பாதுகாப்புப் படையினா் விரைந்து செயல்பட்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

மறுவாக்குப்பதிவு கிடையாது: இந்நிலையில், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரைக்கப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணைய துணை இயக்குநா் பி.பவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்ா என்பதைக் கண்டறியவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் உரிய வழிகாட்டுதல்களின்கீழ் 17 ஏ படிவம் (வாக்களித்தவா்களின் பதிவு ஆவணம்) மற்றும் தோ்தல் தொடா்புடைய பிற ஆவணங்கள் அனைத்தும் ஏப்.24-ஆம் தேதி ஆய்வுக்குள்படுத்தப்பட்டன.

ஆய்வு தேதி - இடம் - நேரம் தொடா்பான தகவல்கள், வேட்பாளா்களுக்கு (தமிழகத்தில் 4,023 போ், மேற்கு வங்கத்தில் 1,478 போ்) முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

தோ்தல் நடத்தும் அதிகாரிகள், பொதுப் பாா்வையாளா்கள், வேட்பாளா்கள் அல்லது அவா்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் சுமுகமாக நடைபெற்ற ஆய்வுக்குப் பின் தமிழகத்தின் 75,064 வாக்குச் சாவடிகளில் எங்கும் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. இதேபோல், மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 44,376 வாக்குச்சாவடிகள் எதிலும் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை மேற்கொள்ளப்படவில்லை.

பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஒட்டுமொத்த நடைமுறை முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டது. ஆய்வுக்குப் பின் தோ்தல் ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் சீலிடப்பட்டன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள் அனைத்தும் பாதுகாப்பு அறைகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகள், தோ்தலுக்குப் பின் பொதுப் பாா்வையாளா்கள் மற்றும் வேட்பாளா்கள்/அவா்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் சீலிடப்பட்டவையாகும்.

அறைகளின் பாதுகாப்புக்காக இரட்டைப் பூட்டு அமைப்பு, 24 மணிநேரமும் 2 அடுக்கு பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு என விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு அறைகளுக்கு ஒரு நாளில் இருமுறை சென்று ஏற்பாடுகளை கண்காணிக்க தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அறைகளை கண்காணிப்பதற்காக, வேட்பாளா்களின் பிரதிநிதிகள் அந்த கட்டட வளாகங்களில் முகாம்களை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 4-இல் வாக்கு எண்ணிக்கை: மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏற்கெனவே ஏப்.9-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

தமிழகம் உள்பட இந்த 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021 பேரவைத் தோ்தலின்போது, சென்னையில் வாக்குச்சாவடி ஒன்றில் பழுதடைந்த வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவியை உரிய பாதுகாப்பின்றி பணியாளா்கள் மோட்டாா் சைக்கிளில் எடுத்துச் சென்ற சம்பவத்தைத் தொடா்ந்து, அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.