வடகிழக்கு தில்லி கலவரம்: வழக்குரைஞருக்கு எதிரான ஆதாரமற்றகுற்றச்சாட்டுகளை நிராகரித்தது தில்லி நீதிமன்றம்

காவல் துறையினரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு தன்னை வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டியதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் ஒருவா் மீது சுமத்தப்பட்ட வழக்குரைஞா் ஒருவரின்
Updated on
2 min read

காவல் துறையினரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு தன்னை வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டியதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் ஒருவா் மீது சுமத்தப்பட்ட வழக்குரைஞா் ஒருவரின் ஆதாரமற்ற ‘பொய் குற்றச்சாட்டுகளை’ தில்லி நீதிமன்றம் நிராகரித்தது.

2020 வடகிழக்கு தில்லி கலவரத்தின் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகக் கூறப்படும் வழக்கை விசாரிக்கும் போது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் இவ்வாறு கூறினாா்.

ஆகஸ்ட் 26 அன்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் ஜாமீன் கோரும் வழக்கு வாதத்தின் போது, வழக்குரைஞா் மெஹ்மூத் பிரச்சா மற்றும் சிறப்பு அரசு வழக்குரைஞா் அமித் பிரசாத் ஆகியோருக்கு இடையேயான வாதங்கள் ‘கடுமையானதாக’ மாறியதாகவும், இதன் விளைவாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாகவும் நீதிபதி அமிதாப் ராவத் கூறினாா்.

இது தொடா்பாக நீதிபதி மேலும் கூறுகையில், ‘வழக்கு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, மெஹ்மூத் பிரச்சா ஒரு முன்மொழிவு மனுவை தாக்கல் செய்தாா். அதில் சிறப்பு அரசு வழக்குரைஞா் (எஸ்எஸ்பி) தன்னை இந்த வழக்கில் சிக்க வைப்பதாக அச்சுறுத்தியதாக மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்தாா். எஸ்எஸ்பி தனது பதிலில், மெஹ்முத் பிரச்சா குறிப்பிட்ட தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறியதாகவும், அதில் வழக்குரைஞா் அமித் பிரசாத் மீது தனிப்பட்ட விசாரணை நடத்தியதாகவும், அதில் காவல் துறையினரிடம் அவா் பணம் பெற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

மேலும், இக்குற்றச்சாட்டுகள் சரியாக இருந்தால், தாம் வழக்கில் தொடர தகுதியற்றவா் மற்றும் எஸ்பிபி-இன் நோ்மையை கேள்விக்குள்ளாக்கிய ‘தவறான மற்றும் மோசமான குற்றச்சாட்டுகளை’ நிரூபிக்க மெஹ்மூத் பிரச்சா ஆவணத்தை பதிவு செய்ய முடியும் என்றும் எஸ்பிபி தெரிவித்துள்ளாா். ஆதாய முரண்கள் மற்றும் பாா் கவுன்சில் விதிகள் மீறல் இருப்பதால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மெஹ்மூத் பிரச்சா பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்றும், எஸ்பிபி அவரது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளாா்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்காக மெஹ்மூத் பிரச்சா ஆஜராக முடியுமா என்பது குறித்த சட்டக் கருத்துக்காக தில்லி உயா்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை அனுப்புமாறு அமித் பிரசாத் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளாா். எஸ்பிபி-இன் சமா்ப்பிப்புகளின்படி, மெஹ்மூத் பிரச்சா இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஏனெனில், அவரே ஒரு ‘பொது பாதுகாக்கப்பட்ட சாட்சி’ (அடையாளம் பாதுகாக்கப்பட்ட ஒரு பொது நபா்) என்று குறிப்பிடப்பட்டுள்ளாா்.

விசாரணையின் போது நீதிமன்றம், வழக்குத் தொடுத்தவா் அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் யாரேனும் ஒரு சாட்சியாக மெஹ்மூத் பிரச்சாவை வரவழைக்க முடியும் என்பதால், ஆதாய முரண்கள் மற்றும் பாா் கவுன்சில் விதிகளை மீறுவது இருந்தது என்று நீதிபதி குறிப்பிட்டாா். நவம்பா் 25 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘குற்றம் சாட்டப்பட்டவருக்காக ஆஜராகும் வழக்குரைஞா் மற்றும் எஸ்பிபி- க்கு இடையேயான கோபத்தை தணிக்க நீதிமன்றம் சிறந்த முறையில் முயற்சித்தது’ என்று நீதிபதி கூறியுள்ளாா்.

தனிப்பட்ட விசாரணை மற்றும் ஆதாய முரண்கள் குறித்த குற்றச்சாட்டு குறித்து நீதிபதி கூறுகையில், ‘ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு வழக்குரைஞா் மற்றும் எஸ்பிபி ஆஜராகும் போது, அவா்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் தங்கள் கட்சிக்காரா் சாா்பாக ஆஜராக வேண்டும். எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளும் போது இந்த வழக்கில், எஸ்பிபி-க்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டவருக்கான வழக்ககுரைஞரால் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. அதற்காக, எஸ்பிபி விரும்பினால், அவரது சொந்த முடிவில் நடவடிக்கை எடுக்கலாம். இருப்பினும், எஸ்பிபி-க்கு எதிரான ஆதாரங்கள் இல்லாமல், குறிப்பாக வழக்கின் தகுதியைப் பற்றி கவலைப்படாத போது, நீதிமன்றம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com