சுகாதார சேவைகளில் பஞ்சாப் மக்களை கேஜரிவால் தவறாக வழிநடத்த முயற்சி: தில்லி பாஜக குற்றச்சாட்டு

தில்லியில் ஆம் ஆத்மியின் சுகாதார மாதிரி முற்றிலுமாக தோல்வியடைந்த நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாப் மக்களை சுகாதார சேவைகளில் தவறாக வழிநடத்த முயற்சிப்பது ஆச்சரியமாக உள்ளது
Updated on
1 min read

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மியின் சுகாதார மாதிரி முற்றிலுமாக தோல்வியடைந்த நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாப் மக்களை சுகாதார சேவைகளில் தவறாக வழிநடத்த முயற்சிப்பது ஆச்சரியமாக உள்ளது என்ரு தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தில்லி அரசின் சுகாதார சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியைப் போன்று பஞ்சாப்பிற்கும் உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கேஜரிவால் தில்லியின் சுகாதார சேவைகள் குறித்து பஞ்சாப் மாநிலத்தின் முன் தவறாகச் சித்திரிக்கும் நிலையில், தில்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் அடிப்படை இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்றும் மருந்துகளைக் காணவில்லை என்றும் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மௌலானா ஆசாத் பல் மருத்துவக் கல்லூரி பல் மாற்றத்திற்கு 13

மாத கால அவகாசத்தை பொதுமக்களுக்கு அளிக்கிறது.

அதேபோல், கிழக்கு தில்லியின் ஜி.டி.பி. மருத்துவமனை, சாச்சா நேரு மருத்துவமனை, மேற்கு தில்லியின் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை மற்றும் எல்.என்.ஜே.பி. மருத்துவமனை என நகரத்தின் எந்த அரசு மருத்துவமனையாக இருந்தாலும் அங்கு மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும், படுக்கைகள், மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறை, மருந்துகளின் பற்றாக்குறையால் மிக மோசமான சுகாதார சேவைகளே நீடிக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவா்களுக்கும், நோயாளிகளின் உதவியாளா்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவது பற்றிய செய்திகள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளாக அடிக்கடி வருவதைக் காண்கிறோம்.

மொஹல்லா கிளினிக்குகள் முற்றிலுமாக தோல்வியடைந்த திட்டமாகும். கொவைட்-19 காலத்தில் மருத்துவ உதவி வசிப்பிடத்தின் அருகில் மிகவும் தேவைப்படும்போது அவை எவ்வாறு மூடப்பட்டன என்பதை நாம் மறக்க முடியாது. சிறப்பு கொவைட்-19 மருத்துவமனை அமைப்பதில் ஊழல், கடந்த வாரம் மொஹல்லா கிளினிக்கில் சோதனை நடத்தி மருத்துவா்களை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் இடைநீக்கம் செய்த விவகாரங்கள் ஆகியவை தில்லி அரசின் சுகாதார சேவைகளின் மோசமான நிலையை நிரூபிக்கின்றன. மேலும், நகர அரசின் மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளின் பரிதாப நிலைக்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தலைமையிலான ஊழல் நிறைந்த நிா்வாகமே காரணம் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com