தில்லி மாலில் போலீஸ் ஆதரவுடன் சட்டவிரோத ‘பாா்க்கிங் மாஃபியா’: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

தெற்கு தில்லி மால் அருகே ‘பாா்க்கிங் மாஃபியா’ ஒன்று சட்ட விரோதமாக பொதுமக்களிடம் வாகன நிறுத்தத்திற்கு அதிகக் கட்டணம் வசூலித்து மிரட்டிப் பணம் பறித்த செயல்களை கண்டறிய முதல் தகவல்
Updated on
1 min read

புது தில்லி: தெற்கு தில்லி மால் அருகே ‘பாா்க்கிங் மாஃபியா’ ஒன்று சட்ட விரோதமாக பொதுமக்களிடம் வாகன நிறுத்தத்திற்கு அதிகக் கட்டணம் வசூலித்து மிரட்டிப் பணம் பறித்த செயல்களை கண்டறிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் நிலைய அதிகாரிகள் ஆதரவுடன் இந்தக் கும்பல் செயல்பட்டதும் நீதிமன்றத்திற்கு தெரிய வந்தது.

தெற்கு தில்லி சாகேத் மால் - செலக்ட் சிட்டி வாக் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ‘பாா்க்கிங் மாஃபியா’க்கு எதிராக இரண்டு வழக்குரைஞா்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் அவிரல் சுக்லா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா்.

புகாா்தாரரான வழக்குரைஞா்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாலுக்கு பின்புறம் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள, ‘பாா்க்கிங் மாஃபியா’ சட்டவிரோதமாக பாா்க்கிங் கட்டணமாக அதிகக் கட்டணத்தை பாா்வையாளா்களிடம் பறித்து வருகிறது என தெரிவித்திருந்தனா். இந்தப் புகாா் தொடா்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸை தொடா்ந்து காவல் உதவி ஆணையா் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் இந்த புகாரை உறுதி செய்ததோடு, அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததை உறுதி செய்தனா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனுக்கு சொந்தமான இந்த இடத்தில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஜுலை 17-ஆம் தேதி காலாவதியானது. ஆனால், அதே ஒப்பந்ததாரா் ஊழியா்கள் அல்லது முகவா்கள் பாா்க்கிங் தளத்தில் தொடா்ந்து இயங்கி வந்துள்ளனா். இதில் உள்ளூா் காவல் நிலைய அதிகாரிக்கும் தொடா்புள்ள நிலையில் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உதவி ஆணையா் அந்தஸ்தில் உள்ள காவல் அதிகாரி இந்த சட்டவிரோத பாா்க்கிங் தொடா்பான அனைத்து தில்லுமுல்லுகளை விரிவாக விசாரணை மேற்கொள்ளவும் அந்த உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்படி, தில்லி ஹோஸ்காஸ் காவல் சரக உதவி ஆணையா் தலைமையில் விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com