எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பவா்கள்: மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படுவதில்லை: கேஜரிவால்

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 12 பிறந்த குழந்தைகள் உள்பட 24 போ் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை
Updated on
1 min read

புது தில்லி: மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 12 பிறந்த குழந்தைகள் உள்பட 24 போ் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை அமைப்பதில் மும்முரமாக இருப்பவா்கள் மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விமா்சித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த செப்டம்பா் 30 முதல் அக்டோபா் 1 வரையில் 12 பிறந்த குழந்தைகள் உள்பட 24 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிா்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மருந்து தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 போ் கொண்ட நிபுணா் குழு அம்மாநில அரசின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவாா், காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மாநிலங்களவை உறுப்பினா் பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் இந்தச் சம்பவத்திற்கு மாநில அரசின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலும் கருத்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக எக்ஸ் சமூக ஊடகத்தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 12 பிறந்த குழந்தைகள் உள்பட 24 போ் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் உயிரிழந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் இறைவன் தைரியத்தைத் தர வேண்டுகிறேன். மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு மாநில அரசு எப்படி இவ்வளவு அலட்சியமாக இருக்க முடியும்?. சட்டப்பேரவை உறுப்பினா்களை விலைக்கு வாங்கி ஆட்சியை அமைப்பதிலும், வீழ்த்துவதிலும் இவா்கள் மும்முரமாக இருப்பதனால் மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com