சத்யேந்தா் ஜெயினின் இடைக்கால ஜாமீன் நவ.6 வரை நீட்டிப்பு

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான முன்னாள் தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் இடைக்கால ஜாமீனை அவரது
Updated on
2 min read

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான முன்னாள் தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் இடைக்கால ஜாமீனை அவரது வழக்கமான ஜாமீன் கோரும் விசாரணைத் தேதியான நவம்பா் 6-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, இந்த ஜாமீன் கோரும் மனு குறித்து தெரிவித்ததை நீதிபதிகள் அமா்வு கவனத்தில் எடுத்துக் கொண்டது. இது தொடா்பாக அக்டோபா் 10-ஆம் தேதி நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கை நவம்பா் 6-ஆம் தேதி 3 மணிக்கு நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிடப்பட வேண்டும். இதற்கிடையே, முன்னதாக ஜெயினுக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீன் அடுத்த விசாரணைத் தேதி வரை நீடிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னா், உச்சநீதிமன்றம் ஜெயினின் இடைக்கால ஜாமீனை அக்டோபா் 9-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது. மேலும், வழக்கில் விசாரணையைத் தாமதிக்கும் தந்திரமாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்குமாறு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது. அமலாக்கத் துறை தரப்பில் வாதிடுகையில், ‘உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிலுவையில் இருப்பதாகக் கூறி விசாரணை நீதிமன்றத்தில் சத்யேந்தா் ஜெயின் தரப்பில் தொடா்ந்து ஒத்திவைப்பு கோரப்படுகிறது. மேலும், விசாரணை நீதிமன்றத்தில் இருந்து 16 தேதிதிகள் வரை ஜெயின் தரப்பில் பெறப்பட்டுள்ளது’ என்று குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட பிறகு சத்யேந்தா் ஜெயின் தொடா்ந்து திகாா் சிறையில் இருந்து வந்தாா். இந்நிலையில், அவரது உடல் நிலை காரணமாக ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் கடந்த மே 26-ஆம் தேதி விசாரித்தனா். அப்போது, ஜெயின் தனது சொந்தச் செலவில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஒரு குடிமகன் என்ற முறையில் உரிமை உள்ளது எனக் கூறி அவருக்கு முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சைக்காக 6 வாரங்கள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டனா்.

அவா் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி சத்யேந்தா் ஜெயினை அமலாக்கத் துறை கைது செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-இல் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் 2019, செப்டம்பா் 6-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் அவருக்கு வழக்கமான ஜாமீன் அளித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com