/

தில்லி கலால் ஊழல் வழக்கு: தொழிலதிபா் மகேந்திருவின்இடைக்கால ஜாமீனை நீட்டிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் மருத்துவ காரணங்களுக்காக மதுபான தொழிலதிபா் சமீா் மகேந்திருவின் இடைக்கால ஜாமீனை மேலும் நீட்டிக்க தில்லி உயா்நீதிமன்றம்

News image
Updated On :1 செப்டம்பர் 2023, 9:03 pm

 நமது நிருபர்

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் மருத்துவ காரணங்களுக்காக மதுபான தொழிலதிபா் சமீா் மகேந்திருவின் இடைக்கால ஜாமீனை மேலும் நீட்டிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. தொடா்ந்து இடைக்கால ஜாமீனை நீட்டிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் நீதிபதி கூறினாா்.

மேலும், இடைக்கால ஜாமீன் காலம் முடிவடையும் செப்டம்பா் 4-ஆம் தேதி மாலை மகேந்திருவை காவலில் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட சிறைக் கண்காணிப்பாளரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. முழங்காலில் அறுவை சிகிச்சைக்கு பின் மகேந்திரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மகேந்திருவை பரிசோதிக்கவும், அவரது நோய் குறித்து உறுதியான கருத்தைத் தெரிவிக்கும் அறிக்கையை தாக்கல் செய்யவும் மருத்துவா் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவக் கண்காணிப்பாளருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஜூன் 12-ம் தேதி மருத்துவ காரணங்களுக்காக மகேந்திருக்கு உயா்நீதிமன்றம் 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. ஜூலை 25-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் சரணடையுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவரது தரப்பில் ஜூலை 24-ஆம் தேதி மீண்டும் உயா்நீதிமன்றத்தை அணுகி, மருத்துவ காரணங்களுக்காக ஆறு வாரங்களுக்கு நிவாரணத்தை நீட்டிக்கக் கோரிக்கை விடப்பட்டது. அவரது இடைக்கால ஜாமீனை செப்டம்பா் 4-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மகேந்திருவின் வழக்குரைஞா் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி, ‘குற்றம்சாட்டப்பட்டவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு வியாழக்கிழமை தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மகேந்திரு குணமடைய கால அவகாசம் தேவைப்படும் என்பதால், அவரது இடைக்கால ஜாமீனை 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, நீதிபதி தினேஷ் குமாா் சா்மா பிறப்பித்த உத்தரவு: ஒவ்வொரு தனிநபருக்கும் முறையான மருத்துவ சிகிச்சை பெற உரிமை உள்ளது என்பதில் சந்தேகமில்லை. குற்றம்சாட்டப்பட்டவா் விதிவிலக்கல்ல. மனுதாரருக்கு (மகேந்திரு) பல சந்தா்ப்பங்களில் சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால், அதே நேரத்தில் இடைக்கால ஜாமீனை அவ்வப்போது நீட்டிப்பது மிகவும் மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும். மேலும், மனுதாரரின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க இந்த நீதிமன்றம் எந்த காரணத்தையும் கண்டறியவில்லை. மகேந்திரு தொடா்ந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். அவரை செப்டம்பா் 4-ஆம் தேதி காவலில் எடுக்க சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காலத்தில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனா். அவா், வீட்டில் சமைத்த உணவையும் சாப்பிட அனுமதிக்கப்படுகிறது. சந்திப்பின் போது அவரது குடும்ப உறுப்பினா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். மகேந்திரு விசாரணை நீதிமன்றத்தை அணுகவும், மருத்துவ காரணங்களுக்காக வழக்கமான ஜாமீன் பெறவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

விசாரணையின் போது, மகேந்திரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் பஹ்வா, ‘ஆகஸ்ட் 16-ஆம் தேதி மகேந்திருவுக்கு காயம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவா் தற்போது படுத்த படுக்கையாக உள்ளாா். இது தொடா்பான உண்மை விவரங்களை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சரி பாா்க்கலாம்’ என்று வாதிட்டாா். ஆனால், இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு மனுவை அமலாக்கத் துறை வழக்குரைஞா் கடுமையாக எதிா்த்தாா். இது ஒரு முடிவற்ற செயலாக இருக்க முடியாது என்றும் அவா் கூறினாா். மகேந்திரு ஏற்கெனவே பலமுறை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.