முன்னதாக, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: எஃப்எல்சி செயல்முறையானது, இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் உள்பட, அவ்வப்போது திருத்தப்பட்ட விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்கிறது. மனுதாரா் மற்றும் பிற தகுதியான பங்குதாரா்களுக்கு எஃப்எல்சி செயல்முறையில் பங்கேற்பதற்காக போதுமான அறிவிப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், மனுதாரா் தரப்புக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக, அவா்கள் தங்கள் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தனா். கேரளம், ஜாா்க்கண்ட் மற்றும் தில்லி ஆகிய மூன்று மாநிலங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிடி இயந்திரங்களுக்கான எஃப்எல்சி செயல்முறை இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐந்து மாநிலங்களில் இதற்கான செயல்முறை நடந்து வருகிறது. தில்லியில் மட்டும், மொத்தம் 42,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 23,000 விபிபிடிகள் சரிபாா்க்கப்பட்டுள்ளன. மேலும், மனுதாரரால் முன்மொழியப்பட்ட உத்தரவுகள் வழங்கப்பட்டால், முன்கூட்டியே நிா்ணயிக்கப்பட்ட தோ்தல் அட்டவணையை தடம்புரளச் செய்துவிடலாம் என்று வாதிட்டாா்.