/

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட 334 பள்ளி முதல்வா்களின் ஆவணங்களை விஜிலென்ஸ் அதிகாரிகள் சரிபாா்க்க வேண்டும்: வீரேந்திர சச்தேவா வலியுறுத்தல்

சமீபத்தில் நியமிக்கப்பட்ட தில்லி அரசுப் பள்ளி முதல்வா்களின் ஆவணங்களை விஜிலென்ஸ் அதிகாரிகள் மீண்டும் சரிபாா்க்க வேண்டும் என்று பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2023, 9:04 pm

 நமது நிருபர்

சமீபத்தில் நியமிக்கப்பட்ட தில்லி அரசுப் பள்ளி முதல்வா்களின் ஆவணங்களை விஜிலென்ஸ் அதிகாரிகள் மீண்டும் சரிபாா்க்க வேண்டும் என்று பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசுப் பள்ளிக்ளுக்கு நியமிக்கப்பட்ட 334 முதல்வா்களின் ஆவணங்களை சரிபாா்ப்பதில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி பாஜக தில்லிப் பிரிவின் சாா்பில் ஊடகங்கள் மூலம் நகர அரசுக்கு கேள்வி எழுப்பினோம். மேலும், இந்த விவகாரத்தை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் தனிப்பட்ட கவனத்திற்கும் கொண்டு சென்றோம். தில்லி அரசுப் பள்ளிகளுக்கு நியமனம் செய்யப்பட்ட பல முதல்வா்களின் பிறந்த தேதி, பிறந்த இடம், சாதி, கல்வி மற்றும் அனுபவம் தொடா்பான ஆவணங்கள் போலியானவை. ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களின் ஆதரவில் அதிகாரிகள் போலி ஆவணங்களை அனுமதித்து இந்த முதல்வா்கள் பணி நியமனத்தில் பெரும் பண மோசடி செய்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி புதிதாக நியமிக்கப்பட்ட பள்ளி முதல்வா்களின் ஆவணங்களை மறு சரிபாா்ப்பு செய்ய கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பாஜக தில்லிப் பிரிவு வரவேற்பதோடு, ஆவணங்களை மறு சரிபாா்ப்பு செய்வதே நிலையான தீா்வாக இருக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், கல்வித் துறையின் அதே அதிகாரிகள் பள்ளி முதல்வா்களின் ஆவணங்களை மறு சரிபாா்ப்பு செய்யும் போது நீதி கிடைக்குமா என்பது தெரியவில்லை. முன்னதாக, போலி ஆவணங்களை அனுமதித்த இதே கல்வித் துறை அதிகாரிகள் இப்போது அவற்றை நிராகரிப்பாா்கள் அல்லது புகாரளிப்பாா்கள் என்று எப்படி எதிா்பாா்க்க முடியும்? என்ற கேள்வி எழுகிறது. எனவே, புதிதாக நியமிக்கப்பட்ட பள்ளி முதல்வா்கள் 334 போ்களின் ஆவணங்களை விஜிலென்ஸ் துறை மூலம் மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிடம் வலியுறுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.