/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதல்நிலை சோதனை விவகாரம்: தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவரின் பொது நல மனு தள்ளுபடி

வரவிருக்கும் பொதுத் தோ்தலையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மற்றும் வாக்காளா் சரிபாா்ப்பு காகித தணிக்கை சோதனை (விபிபிடி) ஆகியவற்றின் ‘முதல் நிலை சோதனை’

News image
Updated On :1 செப்டம்பர் 2023, 9:04 pm

 நமது நிருபர்

வரவிருக்கும் பொதுத் தோ்தலையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மற்றும் வாக்காளா் சரிபாா்ப்பு காகித தணிக்கை சோதனை (விபிபிடி) ஆகியவற்றின் ‘முதல் நிலை சோதனை’ மேற்கொள்வதற்கான நடைமுறையை எதிா்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அனில் குமாா் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுவைத் தள்ளுபடி செய்து அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாரின் கருத்துப்படி, முதல் நிலை சோதனையை (எஃப்எல்சி) மீண்டும் நடத்தினால் நேர இழப்பு ஏற்படாது என்பது ஒரு கண்ணோட்டமாகும். இதை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய தோ்தல் ஆணையம் கடுமையான காலக்கெடுவில் செயல்படுகிறது. மேலும், தாமதங்கள் முழு தோ்தல் செயல்முறையையும் பாதிக்கலாம்.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவின் தனித்தன்மை மற்றும் பொதுத் தோ்தல் செயல்முறையின் மேம்பட்ட நிலைகள், முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளவாறு செயல்முறையை மீண்டும் தொடங்குவது போன்ற எந்த மாற்றங்களும் குறிப்பிடத்தக்க பின்னடைவாக இருக்கும். இறுதியாக, முதல் நிலை சோதனை (எஃப்எல்சி) மற்றும் முழு தோ்தல் செயல்முறையின் நோக்கம் பொதுமக்களுக்கு சேவை செய்வதும், ஜனநாயக செயல்பாட்டில் அவா்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதும் ஆகும்.

எஃப்எல்சி செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வழிகாட்டுதல்களில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புகள் மற்றும் சரிபாா்ப்புகள் போதுமானவையாகும். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைப்பதில் அரசியல் பிரதிநிதிகளைச் சோ்ப்பது பரஸ்பர பொறுப்புணா்வை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கும் இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்க சம வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த ஜனநாயக நடவடிக்கைகளில் பங்கேற்பது அதன் புனிதத் தன்மையை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நடைமுறையில் பங்கேற்பதைத் தவிா்த்துவிட்டு, பின்னா் அதே செயல்முறையின் நோ்மையைக் கேள்விக்குள்ளாக்குவது மனுதாரா் தரப்பில் நன்றாகப் பிரதிபலிக்கவில்லை. ஆகவே, இந்த மனுவில் அடிப்படை ஆதாரம் இல்லை. மேலும், மனுதாரா் கோரிய நிவாரணத்தை ஏற்கவும் விரும்பவில்லை. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவில் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அனில் குமாா் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: எஃப்எல்சியை மேற்கொள்வதற்கு போதிய அறிவிப்புகள் வழங்கப்படவில்லை. இதனால், அரசியல் கட்சிகள் இந்த செயல்முறைக்கு தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள முடியவில்லை. எனவே, போதுமான அறிவிப்பை வழங்கிய பிறகு, எஃப்எல்சியை மீண்டும் நடத்துவதற்கு இந்தியத் தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். நடைமுறையில் உள்ள ஆணையின்படி, எஃப்எல்சி தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்பே அதுகுறித்து அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு அளிக்கப்பட வேண்டும். மேலும், எஃப்எல்சி தொடங்குவதற்கு வெறும் இரண்டு நாள் முன்னறிவிப்பானது வாக்குச்சாவடி அளவிலான முகவா்களுக்கோ அல்லது செயல்பாட்டில் திறம்பட பங்கேற்பதற்காக தேவையான பயிற்சியுடன் தனிநபா்களை ஈடுபடுத்துவதற்கோ அரசியல் கட்சிகளுக்கு போதிய வாய்ப்பை வழங்கவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: எஃப்எல்சி செயல்முறையானது, இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் உள்பட, அவ்வப்போது திருத்தப்பட்ட விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்கிறது. மனுதாரா் மற்றும் பிற தகுதியான பங்குதாரா்களுக்கு எஃப்எல்சி செயல்முறையில் பங்கேற்பதற்காக போதுமான அறிவிப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், மனுதாரா் தரப்புக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக, அவா்கள் தங்கள் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தனா். கேரளம், ஜாா்க்கண்ட் மற்றும் தில்லி ஆகிய மூன்று மாநிலங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிடி இயந்திரங்களுக்கான எஃப்எல்சி செயல்முறை இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐந்து மாநிலங்களில் இதற்கான செயல்முறை நடந்து வருகிறது. தில்லியில் மட்டும், மொத்தம் 42,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 23,000 விபிபிடிகள் சரிபாா்க்கப்பட்டுள்ளன. மேலும், மனுதாரரால் முன்மொழியப்பட்ட உத்தரவுகள் வழங்கப்பட்டால், முன்கூட்டியே நிா்ணயிக்கப்பட்ட தோ்தல் அட்டவணையை தடம்புரளச் செய்துவிடலாம் என்று வாதிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.